
ஷில்லாங்,
ஹங்கேரி நாட்டை சேர்ந்த சோல்ட் புஸ்காஸ் என்ற சுற்றுலா பயணி, கடந்த மார்ச் 29-ந்தேதி மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின் அன்றைய தினமே அறையை காலி செய்துவிட்டு, டாக்சி மூலம் சோஹ்ரா நகருக்கு சென்றுள்ளார்.
அந்த டாக்சியில் மாஷாஹியூ என்ற கிராமம் வரை சென்ற சோல்ட் புஸ்காஸ், அங்கிருந்து நோங்கிரியாத் பகுதியில் உள்ள புகழ்பெற்ற இரட்டை அடுக்கு வேர் பாலத்தை காண்பதற்காக நடந்து சென்றுள்ளார். அவருடன் சுற்றுலா வழிகாட்டி யாரும் செல்லவில்லை.
அதன் பிறகு சோல்ட் புஸ்காஸ் திரும்பி வரவில்லை. அவர் எங்கு சென்றார் என்ற தகவல் கிடைக்காத நிலையில், சோல்ட் புஸ்காஸ் காணாமல் போனதாக ஹங்கேரி தூதரகம் மார்ச் 29-ந்தேதி புகார் அளித்தது. தொடர்ந்து ஏப்ரல் 2-ந்தேதி எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, உள்ளூர் மக்களின் உதவியுடன் சோல்ட் புஸ்காஸை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், ராம்தயித் வனப்பகுதியில் சோல்ட் புஸ்காஸின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் தவறுதலாக வழுக்கி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், தொடர்ந்து இது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.