
விழுப்புரம்,
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் தினந்தோறும் பள்ளி- கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பலரும் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.
அதுபோல் காலை, மாலை வேளைகளில் இந்த மைதானத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருவதுடன், சிலர் கார் ஓட்டும் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் சாலை, வடிகால் வாய்க்கால் மற்றும் வாய்க்கால் பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்கள், அப்பணிக்கு தேவையான கட்டுமான பொருட்களான இரும்புக்கம்பிகள், எம்சாண்ட் உள்ளிட்டவற்றை, அம்மைதானத்தில் வைத்திருந்தனர்.
இதனால் அங்கு விளையாட வருபவர்களுக்கு பெரும் இடையூறாக இருந்ததால் விளையாடுவதற்கு இடமின்றி தவித்தனர். அதுமட்டுமின்றி அம்மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள இரும்புக்கம்பிகளால் பெரும் ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்தது.
எனவே மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டுமென விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து நேற்று 'தினத்தந்தி' நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி பிரசுரமானது. இதன் எதிரொலியாக, அம்மைதானத்தில் இருக்கும் கட்டுமான பொருட்களை உடனடியாக அகற்றும்படி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு இடையூறாக மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த கட்டுமான பொருட்களை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் நேற்று மாலை அப்புறப்படுத்தி எதிரே உள்ள உள்விளையாட்டு அரங்கின் அருகில் உள்ள காலியிடத்தில் வைத்தார்.
இதனால் அம்மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினர்.