மே மாதம் வெயிலும் கொளுத்தும்; மழையும் வெளுக்கும்: ஆய்வாளர்கள் தகவல்

1 hour ago 1

சென்னை: வட கிழக்கு பருவமழை விலகிய பிறகு வட பகுதியில் இருந்து வரும் குளிர் அலைகள் காரணமாக தமிழகத்தில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப் பொழிவு நீடித்து வருகிறது. இந்நிலையில், மார்ச் மாதம் முதல் படிப்படியாக கோடை வெயில் தொடங்குவதுடன் மழையும் பெய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 2025ம் ஆண்டுக்கான நீண்ட கால வானிலை அறிவிப்புகளை வானிலை ஆய்வாளர்கள் வெளியிட்டு வரும் நிலையில், அது குறித்து பெறப்பட்ட தகவல்கள் வருமாறு: வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் இணையும் தெற்கு அரைக்கோளத்தில் இரண்டு காற்று சுழற்சிகள்(புயல்சின்னம்) நிலை கொண்டு இருக்கிறது. இவை காற்றை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன. அவை விலகினால் தான் தமிழகத்தை நோக்கி அடுத்த காற்று சுழற்சி நகர்ந்து வர வாய்ப்புள்ளது. இந்நிலையில், தென்மாவட்டங்களில் தூறல் இருக்கும்.

இன்றும் நாளையும் மேக மூட்டம் இருக்கும். வடபகுதியில் இருந்து வரும் குளிர் காற்றும், தெற்கு பகுதியில் இருந்து வரும் கடல் காற்றும் தமிழக கடலோரப் பகுதியில் இரு காற்றுகளின் இணைவு ஏற்பட்டு தரைப் பகுதி நோக்கி நகரும். உள் மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் குழப்பமான சூழ்நிலை இருக்கும். சில இடங்களில் தூறல் விழ வாய்ப்புள்ளது. மார்ச் மாதம் 3வது அல்லது 4வது வாரத்தில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் இருக்கும். அத்துடன் கோடை மழையும் இருக்கும். ஏப்ரல் மே மாதங்களில்2 காற்று சுழற்சி ஏற்பட்டு மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக தென் மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கிவிடும். தமிழகத்தில் வெப்பச் சலன இடி மழையாக பெய்யும் என்று எதிர்பார்க்கலாம். குறிப்பாக வட கிழக்கு பருவமழையின் போது தமிழக கடலோரப் பகுதியில் இந்த ஆண்டு பாதிக்கும் அளவு மழை பொழிவு இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post மே மாதம் வெயிலும் கொளுத்தும்; மழையும் வெளுக்கும்: ஆய்வாளர்கள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article