மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம், இதர வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

4 weeks ago 6

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 55வது கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

“ஒன்றிய அரசின் வரவு – செலவு திட்டத்திற்கான முன்னோட்டம் குறித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ஒன்றிய அரசு நடத்திய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்றேன்.

சென்னை மெட்ரோ இரயில் 2-ம் கட்ட பணிகளுக்காகத் தமிழ்நாடு அரசு ரூ.26,490 கோடி ரூபாய் செலவிட்டுள்ள காரணத்தால், மாநிலத்தில் இதர வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள ஏதுவாக, நடப்பாண்டில் ரூ. 10,000 கோடி மற்றும் அடுத்த ஆண்டு ரூ.16,000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தினேன்.

ஆசிரியர்களுக்கான ஊதியம் – கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பள்ளிச் செயல்பாடுகளை முடக்கும் வகையில், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்காமல் நிபந்தனைகளை ஏற்க வற்புறுத்தி வரும் ஒன்றிய அரசு, 44 இலட்சம் மாணவர்கள் – 2.2 இலட்சம் ஆசிரியர்கள் – 21,276 பணியாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினேன்.

ஒன்றிய அரசின் 2025 நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிய ரயில் திட்டங்களுக்கான அனுமதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் ஒன்றிய அரசை வலியுறுத்தினேன்.

வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவற்றின் தீவிரத்தன்மை காரணமாக தமிழ்நாடு தொடர் பேரிடர் சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், மக்களின் உயிர் – வாழ்வாதாரம் – உட்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் உண்டாகி வருகிறது. நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதி போதுமானதாக இல்லை. குறிப்பாக, ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.6.675 கோடியை விடுவிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தினேன்’ என தெரிவித்துள்ளார்.

The post மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம், இதர வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article