சேலம், ஜன.19: சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா வளாகத்தில் வன விலங்குகளின் சிகிச்சைக்காக ₹1 கோடியில் பிரத்யேக மருத்துவமனை கட்டப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் தற்போது தொடங்கி முழுவீச்சில் நடக்கிறது. சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பூங்காவில் புள்ளிமான், கடமான், முதலை, மலைப்பாம்பு, முயல், நரி, வண்ணப்பறவைகள், வெள்ளை மயில் உள்ளிட்ட 200க்கும் அதிகமான வன விலங்குகளை வன ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர்.
இந்த பூங்காவிற்கு ஆண்டு முழுவதும் சேலம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்துசெல்கின்றனர். குறிப்பாக ஏற்காட்டிற்கு வரும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளும் குரும்பப்பட்டி பூங்காவிற்கு வந்து விலங்குகளை பார்த்து வருகின்றனர். வார இறுதி நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் தினமும் 2,500க்கும் மேற்பட்டோர் வந்து, பூங்காவை பார்வையிடுகின்றனர். இப்பூங்காவிற்கு வந்து செல்வதற்காக சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுபோக கோரிமேட்டில் இருந்து வனத்துறை சார்பில் 2 வேன்கள் இயக்கப்படுகின்றன. அதிலும், ஏராளமான பயணிகள் தினமும் பூங்காவிற்கு வந்துச்செல்கின்றனர்.
இந்த பூங்காவில் உள்ள 200க்கும் மேற்பட்ட வன விலங்குகளுக்கு ஏதேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால், கோவை, ஓசூர், சென்னையில் இருந்து வனத்துறையின் வன விலங்குகளுக்கான மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளிக்கின்றனர்.
அவசர தேவைக்கு சேலம் கால்நடை மருத்துவமனையில் இருந்து மருத்துவக்குழுவினர் வந்து பார்த்துக்கொள்கின்றனர். குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை நடுத்தர பூங்காவாக தரம் உயர்த்தியிருப்பதால், மிக விரைவில் கரடி, சிறுத்தை, புலி உள்ளிட்ட பெரிய விலங்குகளை கொண்டு வந்து பராமரிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். இதில், பூங்கா விரிவாக்கம் செய்யப்பட்டு, புள்ளிமான்களுக்கு தனியாக ஒரு பகுதியை ஒதுக்கீடு செய்யவும், கரடி, சிறுத்தை உள்ளிட்ட பெரிய விலங்குகளை வைத்து பராமரிக்க தனிப்பகுதியை ஏற்படுத்தும் பணியையும் மேற்கொள்ள இருக்கின்றனர். இதனிடையே பூங்காவில் உள்ள வன விலங்குகளுக்கு உரிய சிகிச்சையை விரைவாக அளித்திட ஏதுவாக பூங்கா வளாகத்தில் ₹1 கோடி மதிப்பீட்டில் வன விலங்குகளுக்கான பிரத்யேக மருத்துவமனையை கட்ட அரசு அனுமதி அளித்து, நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது.
அந்த நிதியை கொண்டு, பூங்கா வளாகத்தில் தற்போது வன விலங்குகளுக்கான பிரத்யேக மருத்துவமனையை கட்டும் பணி தொடங்கியுள்ளது. மருத்துவர்கள் அறை, மருந்தகம், அறுவை சிகிச்சை அரங்கம், விலங்குகளுக்கான சிகிச்சை வார்டு, ஸ்கேன் அறை, வரவேற்பறை உள்ளிட்டவை அடங்கிய பெரிய மருத்துவமனையாக அமைகிறது. இந்த மருத்துவமனை கட்டுமான பணியை ஓராண்டு காலத்திற்குள் முடிக்க திட்டமிட்டு, பணிகளை செய்து வருகின்றனர்.
இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் உள்ள 200க்கும் அதிகமான வன உயிரினங்களுக்கு தேவையான சிகிச்சையை உடனுக்குடன் அளித்திட பூங்கா வளாகத்தில் வன விலங்குகளுக்கான பிரத்யேக மருத்துவமனை கட்டப்படுகிறது. இந்த மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரும்போது, சேலத்திலேயே வன விலங்குகளுக்கான மருத்துவர்கள், உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள். இது விலங்குகளின் அவசர கால சிகிச்சைக்கும், உரிய அறுவை சிகிச்சைகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும். அதேபோல், காட்டில் இருந்து கிராமங்களுக்குள் புகுந்திடும் காட்டுமாடு, யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளை பிடித்து அப்புறப்படுத்த மருத்துவக்குழுவினர் உதவிடுவார்கள். விரைவில் இம்மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்,’’ என்றனர்.
The post வனவிலங்குகள் சிகிச்சைக்காக ₹1 கோடியில் மருத்துவமனை appeared first on Dinakaran.