மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஒத்திவைப்பு: அதிகாரிகள் தகவல்

3 months ago 12

சென்னை: பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் நேற்று நடைபெற இருந்த ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்திட்டத்தின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுனர் இல்லாமல் தானியங்கி முறையில் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரயில்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனத்திற்கு ரூ.1,215.92 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியது.

இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 8ம் தேதி ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியை இந்த நிறுவனம் தொடங்கியது. அதன் பிறகு முதல் ரயிலினை கடந்த செப்டம்பர் 22ம் தேதி தயாரித்து முடித்ததாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் ஓட்டுனர் இல்லாத தயாரிக்கப்பட்டுள்ள முதல் மெட்ரோ ரயிலினை பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் சோதனை ஓட்டத்திற்காக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து மூன்று பெட்டிகள் கொண்ட முதல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் வரும் நேற்று தொடங்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: கடந்த அக்.18ம் தேதி ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டத்தை நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் மழையின் காரணமாக அக்.26ம் தேதிக்கு மாற்றப்பட்டது. மேடைகள் அமைப்பது, அலங்காரம் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் முடியும் நிலையில் இருந்தது. ஆனால் திடீரென சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கான காரணத்தை உயரதிகாரிகள் கூறவில்லை. இந்நிலையில் அடுத்த வாரம் அல்லது தீபாவளி பண்டிகைக்கு பின் சோதனை ஓட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.பூந்தமல்லி முதல் போரூர் வழியாக கலங்கரை விளக்கம் வரை செல்லும் பிரதான வழிதடத்தில் குறிப்பிட்ட சில கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. பூந்தமல்லி மெட்ரோ பணிமனையில் நடைபெற உள்ள சோதனை ஓட்டத்தில் சிக்னல், பிரேக் பாயிண்ட், பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சோதனைகள் நடைபெற உள்ளது. மக்களுக்கு ரயில் சேவைகள் வழங்கும் வரை சோதனை ஓட்டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஒத்திவைப்பு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article