சென்னை,
வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்று காலை பல இடங்களில் கனமழை கொட்டியது.
இதனால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியது. தேங்கிய மழைநீரை அகற்றுவதற்காக தமிழக அரசின் அனைத்து துறைகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில், கனமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
"கனமழை குறித்த 'அலெர்ட்' பெறப்பட்டவுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பொதுமக்களின் ஒத்துழைப்போடு எதிர்கொண்டோம். பெரும்பாலான இடங்களின் மழைநீர் தேங்காமல் சரிசெய்யப்பட்டுள்ளது. முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.