
புலவாயோ,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 24 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த போதிலும் அடுத்து வந்த பொறுப்பு கேப்டன் வியான் முல்டெர் ஜிம்பாப்வே பந்து வீச்சை அடித்து நொறுக்கினார். அவருக்கு டேவிட் பெடிங்காம் (82 ரன்), டிரே பிரிட்டோரியஸ் (78 ரன்) நன்கு ஒத்துழைப்பு தந்தனர். அபாரமாக ஆடிய முல்டெர் 214 பந்துகளில் தனது முதலாவது இரட்டை சதத்தை நிறைவு செய்தார். அதன் பிறகும் அவரது ரன்வேட்டை நீடித்தது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 465 ரன்கள் அடித்திருந்தது. முல்டெர் 264 ரன்களுடனும் (259 பந்து, 34 பவுண்டரி, 3 சிக்சர்), டிவால்ட் பிரேவிஸ் 15 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் பிரெவிஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கைல் வெர்ரைன் களமிறங்கினார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முல்டர் முச்சத்தம் அடித்து அசத்தினார். கேஷவ் மகராஜ் விலகிய சூழலில் கேப்டன் பொறுப்பை ஏற்ற முல்டர் முதல் போட்டியிலேயே முச்சதம் அடித்து அசத்தினார்.
அதன்பின்னும் ஓயாத அவர் அதிரடியாக விளையாட தொடங்கினார். இதனால் மளமளவென ரன் குவித்த அவர் 350 ரன்களை கடந்து அசத்தினார். இதனால் டெஸ்ட் போட்டியில் தனிநபர் அதிகபட்ச ரன் அடித்த பிரையன் லாராவின் (400 ரன்கள்) சாதனையை வியான் முல்டர் முறியடிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர் 367 ரன்களில் இருந்தபோது உணவு இடைவேளை விடப்பட்டது.
இடைவேளை முடிந்து அவர் தொடர்ந்து பேட்டிங் செய்து லாராவின் சாதனையை முறியடிப்பார் என பலரும் பேச தொடங்கினர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தென் ஆப்பிரிக்க அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதனால் பிரையன் லாராவின் வாழ்நாள் சாதனை தப்பியது.
தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 114 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 626 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. வியான் முல்டர் 367 ரன்களுடனும், கைல் வெர்ரைன் 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த ஆட்டத்தில் 367 ரன்கள் அடித்த வியான் முல்டர் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன் அடித்த தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைத்தார். அத்துடன் வெளிநாடுகளில் (சொந்த மண்ணை தவிர்த்து) நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 12 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.