
முர்ஷிதாபாத்,
மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டம் தொடர்பாக சுதி, ஜாங்கிப்பூர் மற்றும் சாம்சர்கஞ்ச் பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் பெரிய அளவில் வன்முறை பரவியது. பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை மர்ம கும்பல் சூறையாடியது. வீட்டு உபயோக பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், பலருக்கு காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த வன்முறைக்கு தந்தை மற்றும் மகன் என 2 பேர் பலியானார்கள். வன்முறை பாதித்த சாம்சர்கஞ்ச் பகுதியில் ஜாப்ராபாத் என்ற இடத்தில் வீட்டில், அவர்கள் 2 பேரும் கத்தித்குத்து காயங்களுடன் கிடந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், அவர்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டனர் என தெரிவிக்கப்பட்டது. அவர்களுடைய வீட்டை மர்ம நபர்கள் கொள்ளையடித்ததுடன், 2 பேரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டனர் என அவர்களுடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். இதேபோன்று வன்முறைக்கு மற்றொரு நபர் பலியானார். மொத்தம் 3 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். வன்முறைக்கு 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 138 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் நகரில், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, டூடூ-பசந்த்கார் பகுதியில் பணியின்போது, உயிரிழந்த ஜான்டு அலி ஷேக் மற்றும் அவருடைய குடும்பத்தினரை நான் வணங்குகிறேன். அவருடைய மனைவியும், குழந்தைகளும் வந்துள்ளனர். நாட்டுக்காக அவர் உயிரை துறந்துள்ளார் என்று கூறியுள்ளார்.
அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், போலீஸ் துறையில் ஒரு வேலையும் நாங்கள் வழங்கியுள்ளோம் என்றார். அவர் தொடர்ந்து பேசும்போது, நான் துலியான் பகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டேன். 400 குடும்பங்களை சந்தித்து பேசினேன். 280 குடும்பங்களுக்கு தலா ரூ.1.20 லட்சம் வழங்குவோம் என்று கூறினார்.