பொள்ளாச்சி: பொள்ளாச்சி, பாளையங்கோட்டை ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்களை தார்பூசி அழித்து போராட்டம் நடத்தினர்.தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதை கண்டித்தும், கல்வி நிதியை தமிழ்நாட்டிற்கு தராமல் ஒன்றிய அரசு அடம்பிடிப்பதை கண்டித்தும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒன்றிய அரசை கண்டித்து, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், இந்தி எழுத்துக்களை தார் பூசி அழிக்கும் போராட்டம் நேற்று நடந்தது.
அப்போது ரயில்வே ஸ்டேஷன் நடைபாதை செல்லும் வழியில் இருந்த ஊர் பெயர் குறிப்பிட்ட பலகையில் எழுதியிருந்த இந்தி எழுத்துகளை தார்பூசி அழித்தனர். ‘‘தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்’’ என அப்போது அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இந்தி எழுத்துகளை அழித்தது குறித்து கேட்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக திமுக சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் மீது பாலக்காடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல திமுக பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் ராஜவர்மன் தலைமையில் 8 பேர், நெல்லை, பாளையங்கோட்டை ரயில் நிலையத்திற்கு நேற்று ஒன்றிய அரசை கண்டித்து கோஷமிட்டபடி சென்றனர். ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை மட்டும் கருப்பு மையால் அழித்தனர். அதனருகே `தமிழ் வாழ்க’ என எழுதிச் சென்றனர். இதுகுறித்து நெல்லை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு: ரயில் நிலையங்களில் ‘இந்தி’ அழிப்பு appeared first on Dinakaran.