
மும்பை,
இந்திய கிரிக்கெட்டின் இளம் நட்சத்திர ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால். இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக நிரந்தர இடத்தை பிடித்துள்ள ஜெய்ஸ்வால், ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் பிடிக்க போராடி வருகிறார். இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில், தற்போது அவர் மும்பை அணியில் இருந்து விலகி கோவா அணிக்காக விளையாட உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதற்கு கடந்த ரஞ்சி சீசனில் சீனியர் மும்பை வீரருடன் ஏற்பட்ட வாக்குவாதமே மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணியை விட்டு, கோவாவுக்கு செல்வது ஏன்? என்பது குறித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, எனக்கு இது மிகவும் கடினமான முடிவு. ஏனெனில், இன்று நான் இருக்கும் அனைத்து நல்ல நிலைமைக்கும் மும்பை அணியே காரணம்.
இந்த நகரம் இன்று நான் கொண்டிருக்கும் வாழ்க்கையை பெற்றுக் கொடுத்தது. அதற்குக் காரணமான மும்பை வாரியத்திற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். அதே சமயம் கோவா தலைமைப் பொறுப்புடன் எனக்குப் புதிய வாய்ப்பை கொடுத்துள்ளது.
இந்தியாவுக்காக விளையாடுவதே எனது முதல் இலக்கு. நாட்டுக்காக விளையாடாத நேரத்தில் கோவாவுக்காக விளையாடி அவர்களை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்ல முயற்சிப்பேன். எனது வழியில் வந்துள்ள இந்த முக்கியமான வாய்ப்பை நான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.