அதிகரிக்கும் போர்ப்பதற்றம்: இந்திய ராணுவம் குறித்து விராட் கோலி வெளியிட்ட பதிவு.. வைரல்

8 hours ago 1

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்து போர் பதற்றம் உருவாகியது.

அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கபப்ட்டது. அதேவேளை, எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நீடித்து வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகியுள்ளது. இரு நாடுகளும் மோதலை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்தியா திறம்பட சமாளித்து பதிலடி கொடுத்து வருகிறது.

இதனால் இந்திய ராணுவத்தை பல விளையாட்டு வீரர்ளும், சினிமா பிரபலங்களும், பல்வேறு நட்சத்திரங்களும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த கடினமான காலங்களில் நமது நாட்டை கடுமையாகப் பாதுகாத்ததற்காக நமது ஆயுதப் படைகளுடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம். அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம். நமது மாவீரர்களின் அசைக்க முடியாத துணிச்சலுக்கும், நமது மகத்தான தேசத்திற்காக அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் செய்யும் தியாகங்களுக்கும் மனமார்ந்த நன்றியுணர்வுக்கும் நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Entire Article