
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள மஸ்ஜித் பந்தர் பகுதியில் 11 மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று காலை 6.11 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டிடத்தில் இருந்து வெளிவந்த புகையால் பலரும் மூச்சு திணறலில் பாதிக்கப்பட்டனர். மேலும் கட்டிடத்தில் இருந்து வேகவேகமாக வெளியேறினர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காலை 6.31 மணியளவில் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சபிலா காதும் ஷேக் (வயது 42) என்கிற பெண் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தார். மேலும் இதில் வெளியான புகையால் 3 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.