
இஸ்லாமாபாத்,
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துக்கும் (ஐ.எம்.எப்.), பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாகிஸ்தானுக்கு முதல் தவணையாக 110 கோடி டாலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் 2-வது தவணையாக 102 கோடி டாலரை (ரூ.8 ஆயிரத்து 670 கோடி) சர்வதேச நாணயம் நிதியம் விடுவித்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தபோது, இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இந்த தொகை விடுவிக்கப்பட்டது.
தற்போது அடுத்த தவைணையை விடுவிக்க பாகிஸ்தானுக்கு கூடுதலாக 11 புதிய நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதித்து இருப்பதாக அந்த நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது. இவற்றையும் சேர்த்து மொத்த நிபந்தனைகள் 50 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் இந்தியாவுடனான போர் பதற்றம் இந்த கடன் திட்டத்தில் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.