
கோவை,
கோவை கொடிசியாவில் நடைபெற்ற தமிழின எழுச்சி பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
கடந்த 2016-ம் ஆண்டு நாம் 1.1 சதவீதம் ஓட்டுகளை பெற்றோம். தொடர்ந்து படிப்படியாக வளர்ந்து 2024-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 36 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளோம். வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காணும். எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம்.
கூட்டணி அமைக்காததால் எங்கள் கட்சி தொண்டர்கள் சோர்வு அடைந்து விட மாட்டார்கள். இந்தியாவில் எல்லா இடைத்தேர்தலிலும் புறக்கணிக்காமல் போட்டியிட்ட ஒரே கட்சி நாதக. தோல்வி என்பது தோல்வியல்ல, பயிற்சி. எந்த கட்சியோடும் சேராமல் தனித்து நின்று மாநில அங்கீகாரம் பெற்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.
2026-ம் ஆண்டு தேர்தலுக்கு விவசாயி சின்னம் மீண்டும் கிடைத்துள்ளது. எனது எண்ணம் மட்டும் இந்த சின்னம் அல்ல. சின்னமே நான் தான். 2026-ம் ஆண்டு தேர்தலில் 117 இடங்கள் பெண்களுக்கும், 117 இடங்கள் ஆண்களுக்கும் ஒதுக்கப்படும். இதில் 134 இடங்கள் இளைஞர்களுக்கு கொடுக்கப்படும். இலங்கை இனப்படுகொலை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.