மும்பை விமானம் திடீர் ரத்து திருச்சி, மதுரை, டெல்லி செல்லும் விமானங்கள் 2 மணிநேரம் தாமதம்: புத்தாண்டு கொண்டாட செல்ல முடியாததால் பயணிகள் வாக்குவாதம்

1 month ago 6

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 3.50 மணிக்கு, மும்பை செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் 178 பயணிகள் பயணிக்க இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள். மதுரையிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு, சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், மாலை 3.50 மணிக்கு, மும்பைக்கு புறப்பட்டு செல்லும்.

ஆனால் அந்த விமானம், மதுரை விமான நிலையத்தில், இயந்திர கோளாறு ஏற்பட்டு நின்று விட்டதால், சரி செய்யப்பட்டு தாமதமாக மாலை 6 மணிக்கு சென்னைக்கு வந்துவிட்டு, இரவு 7 மணிக்கு, சென்னையில் இருந்து மும்பைக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த 178 பயணிகள், இரவு 7 மணிக்கு, விமானம் புறப்பட்டாலும், இரவுக்குள் மும்பை சென்று, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சொந்த ஊர் சென்று விடலாம் என்று இருந்தனர்.

ஆனால் மாலை 6 மணி அளவில், மதுரையில் பழுதடைந்து நிற்கும் ஏர் இந்தியா விமானம், இன்னும் பழுதுபார்க்கப்படவில்லை. எனவே இன்று மதுரை- சென்னை, சென்னை-மும்பை ஏர் இந்தியா பயணிகள் விமானம் ரத்து என்று திடீரென அறிவிப்பு செய்யப்பட்டது. இதை அடுத்து ஆத்திரமடைந்த மும்பை பயணிகள், சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பெரும்பாலான பயணிகள், தங்கள் மும்பை பயணத்தையே ரத்து செய்துவிட்டனர்.

விமானம் திடீர் ரத்து காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் செல்ல இருந்த பயணிகள், மும்பை செல்ல முடியாமல், சென்னையில் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த விமானம் மட்டும் இன்றி, சென்னையில் இருந்து நேற்று மாலை திருச்சி, ராஜமுந்திரி, புனே, வாரணாசி, மதுரை, கவுஹாத்தி, ராஞ்சி, டெல்லி, மங்களூரு உள்பட பத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ஒருமணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரையில், தாமதமாக புறப்பட்டு சென்றன.

இந்த விமானங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகள் அதிக அளவில் இருந்ததால், அவர்களும் பெரும் தவிப்புக்கு உள்ளானார்கள். மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானம், இயந்திர கோளாறு காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில், மற்ற 10க்கும் மேற்பட்ட விமானங்கள் இவ்வாறு, திடீரென நேற்று மாலையில் இருந்து காலதாமதம் ஆனதற்கு என்ன காரணம் என்று, அதிகாரிகள் பயணிகளுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை. இதனால், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகளை தவிக்க செய்தது.

The post மும்பை விமானம் திடீர் ரத்து திருச்சி, மதுரை, டெல்லி செல்லும் விமானங்கள் 2 மணிநேரம் தாமதம்: புத்தாண்டு கொண்டாட செல்ல முடியாததால் பயணிகள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Read Entire Article