மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்: பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி இரங்கல்

3 months ago 16

மும்பை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மக்களை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவன தலைவருமான ரத்தன் டாடா வயது முதிர்வு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டார். ரத்தம் அழுத்தம் குறைந்ததால் கடந்த திங்கள்கிழமை மும்பை பிரீச் கேன்டி மருத்துவமனையில் ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் வெளியான நிலையில், ரத்தன் டாடா தனது எக்ஸ் தள பதிவில், ‘எனது வயது தொடர்பான மருத்துவ நிலைமைகள் காரணமாக நான் தற்போது மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறேன். கவலைப்படுவதற்கு எந்த அவசியமும் இல்லை. நான் நல்ல மனநிலையில் இருக்கிறேன். ஊடகங்கள் தவறான தகவலை பரப்ப வேண்டாம். எனது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவுவதை நான் அறிவேன். மேலும் இந்த கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்’ என்று பதிவிட்டு இருந்தார்.

நேற்று இரவு ரத்தன் டாடா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் ரத்தன் டாடா உயிர் பிரிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இவர், டாடா குழும சாம்ராஜ்யத்தை 1991ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2012ம் ஆண்டு டிசம்பர் வரை தலைவராக வழிநடத்தியவர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1937ம் ஆண்டு டாடா குடும்பத்தில் ஜம்சேத் டாடா மகன் ரத்தன் டாடாவால் தத்தெடுக்கப்பட்ட நேவல் டாடாவுக்கு மகனாக பிறந்தவர் ரத்தன் டாடா. இவர், 7 வயதை எட்டியபோது, பெற்றோர் பிரிந்தனர். அதன்பிறகு பாட்டி நவஜிபாய் அரவணைப்பில் ரத்தன் டாடாவும், அவரது சகோதரர் ஜிம்மியும் வளர்ந்தனர். 8ம் வகுப்பு வரை மும்பையில் உள்ள கேம்பியன் பள்ளியில் படித்த ரத்தன் டாடா, பின்னர் கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளியில் படித்தார். தொடர்ந்து, சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பளியில் படித்த டாடா பின்னர், நியூயார்க்கில் உள்ள ரிவர்டேல் கன்ட்ரி பள்ளியில் பயின்று 1955ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். பிறகு, கார்னெல் பல்கலை கல்லூரியில் சேர்ந்த டாடா, 1959ம் ஆண்டு கட்டிடக்கலை இன்ஜினியரிங்கில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து, 1975ம் ஆண்டு ஹார்வர்டு வணிகப்பள்ளியில் மேலாண்மை பட்டம் பெற்றார்.

ஜே.ஆர்.டி.டாடாவின் அறிவுரையின்படி, ஐபிஎம் நிறுவனத்தில் கிடைத்த வேலையை உதறிவிட்டு இவர் 1962ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா குழுமத்தில் சேர்ந்தார். இவர் முதலில் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றினார். ஜெ.ஆர்.டி.டாடா, 1991ல் ஓய்வு பெற்றவுடன் டாடாவின் இதர நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் டாடா பவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா தேனீர், டாடா கெமிக்கல்ஸ், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாடா டெலிசர்வீசஸ் ஆகிய பெரும் டாடா நிறுவனங்களுக்கு ரத்தன் டாடா தலைவரானார். இவரது பதவிக்காலத்தில் டாடா குழுமம் டெட்லி, ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் கோரஸ் நிறுவனங்களை கையகப்படுத்தியது. இது இந்தியாவை மையமாகக் கொண்ட டாடா குழுமத்தை உலகளாவிய வணிகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது. டாடா குழும நிறுவன தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த அவர், கடந்த 2012ம் ஆண்டு ஏற்பட்ட வாரிசு பிரச்னையால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்தியவர்.

1 லட்சத்தில் நானோ காரை தயாரித்து, சந்தையில் அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும். டாடா தனது வருமானத்தில் சுமார் 6065% தொண்டுக்கு நன்கொடையாக அளித்து, உலகின் பெரும் வள்ளலாக திகழ்கிறார். கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்க்ஜோவ் நகரத்தின் பொருளாதார ஆலோசகர் பட்டம் ரத்தன் டாடாவுக்கு வழங்கப்பட்டது. பின்னர், 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 30ல் லாஸ்ஏஞ்சல்சில் உள்ள, தென் கலிபோர்னியா பல்கலையின் அறங்காவலர் குழுவிற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பார்ச்சூன் இதழ் வெளியிட்ட மிகவும் ஆற்றல் மிக்க வர்த்தகர்கள் பட்டியலில் இவர் இடம் பெற்றார். 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று சிங்கப்பூர் அரசாங்கம் கவுரவக் குடிமகன் தகுதியை ரத்தன் டாடாவுக்கு வழங்கியது.

டாடா சால்ட் முதல் சாப்ட்வேர் வரை டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்ற ரத்தன் டாடா, சால்ட் முதல் சாப்ட்வேர் வரை பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார். அவர் பலதுறைகள் உருவாக்கிய சாம்ராஜ்யம் பின் வருமாறு:

* பைனான்ஸ் டாடா கேபிடல்ஸ், டாடா ஏஐஜி, டாடா ஏஐஏ.

* ஆட்டோமோடிவ் டாடா மோட்டார்ஸ், ஜாகுவார், லேண்ட் ரோவர்.

* டெலிகாம் & ஊடகம் டாடா டெலி, டாடா கம்யூனிகேசன், தேஜஸ் நெட்வொர்க், டாடா பிளே.

* லைப்ஸ்டைல்ஸ் டைட்டன் வாட்ச், தான்ஷிக்யூ, பாஸ்ட்ராக், வெஸ்ட்சைட், டிரெண்ட், டனெரியா.

* உணவு டாடா உப்பு, ஸ்டார்பக்ஸ் காபி, டாடா டீ, டாடா சம்பான், டெட்லே, டாடா சோல்புல், ஹிமாலயன், டாடா கியூ.

* தொழில்நுட்பம் டாடா எல்க்சி, டாடா கன்சல்டன்சி, டிசிஎஸ் ஐஆன், டாடா கிளாஸ் எட்ஜ்.

* ரீடெய்ல் & இ காமெர்ஸ் ஸ்டார் குயிக், பிக் பாஸ்கெட், டாடா நியோ, ஸ்டார் பசார், டாடா கிளியோ, டாடா கிரோமா.

* பயணம் தாஜ், விவான்டா, விஸ்தாரா, ஜிஞ்சர், ஏர் ஏசியா, ஏர் இந்தியா.

* உள்கட்டமைப்பு டாடா கன்சல்டிங் இன்ஜினியரிங், டாடா புராஜெக்ட், டாடா ஹவுசிங், டாடா பவர்.

* இரும்பு உற்பத்தி டாடா மெடாலிக்ஸ், டாடா ஸ்டீல்ஸ்

தொலைநோக்கு வணிகத் தலைவர்

பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில், ‘ரத்தன் டாடா ஒரு தொலைநோக்கு வணிகத் தலைவர், இரக்கமுள்ளவரும், அசாதாரண மனிதரும் ஆவார். அவர் தனது பணிவு, இரக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் சமூகத்தை சிறப்படைய உழைத்தவர். அவரது, தனித்துவமான அம்சங்களில் ஒன்று, சமூகத்துக்கு கொடுப்பதில் அவர் கொண்டிருந்த ஆர்வம். எனவே, கல்வி, சுகாதாரம், சுகாதாரம், விலங்குகள் நலம் போன்றவற்றில் முன்னணியில் இருந்தார். அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்களுடன் உள்ளன’’ என பதிவிட்டுள்ளார்.

தொழில்துறையின் உண்மையான டைட்டன்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தனது எக்ஸ் தளத்தில், ‘ரத்தன் டாடாவின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவர், இந்திய தொழில்துறையின் உண்மையான டைட்டன். பணிவு மற்றும் இரக்கத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்பவர். அவரது தொலைநோக்கு தலைமை டாடா குழுமத்தை வடிவமைத்தது மட்டுமல்லாமல், அவரது நெறிமுறை உலகளாவிய வணிக நடைமுறைகளுக்கு அளவுகோலை நிர்ணயித்தது. தேசத்தைக் கட்டியெழுப்புதல், கண்டுபிடிப்புகள் மற்றும் கொடைத்தன்மை ஆகியவற்றில் அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு மில்லியன் கணக்கான உயிர்களின் மீது அழியாத முத்திரையை பதித்துள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

முத்திரை பதித்தவர்

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ‘ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர். அவர் வணிகம் மற்றும் உதவி செய்தல் ஆகிய இரண்டிலும் நீடித்த முத்திரையை பதித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் விலைமதிப்பற்ற மகன்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘ரத்தன் டாடாவின் மறைவில், இந்தியாவின் விலைமதிப்பற்ற மகனை இழந்துவிட்டோம்.டாடாவின் நெறிமுறை மற்றும் அர்ப்பணிப்பு நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது. அவர் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு உத்வேகமாகவும் அடையாளமாகவும் இருந்தார். அதுமட்டுமின்றி, தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை வழங்கினார். அவரது அன்புக்குரியவர்களுக்கும், அன்பர்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன்’’ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அன்பான நண்பரை இழந்துவிட்டேன்

தொழிலதிபர் முகேஷ் அம்பானி வெளியிட்ட அறிக்கையில்,‘ரத்தன் டாடாவின் மறைவு டாடா குழுமத்திற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியருக்கும் பெரும் இழப்பாகும். தனிப்பட்ட அளவில், ரத்தன் டாடாவின் மறைவு, எனக்கு ஒரு அன்பான நண்பரை இழந்தது போன்றது. ரத்தன் டாடா ஒரு தொலைநோக்கு தொழிலதிபர் மற்றும் ஒரு வள்ளல் ஆவார். அவர் சமூகத்தின் சிறந்த நன்மைக்காக எப்போதும் பாடுபட்டார். அவரது மறைவால், இந்தியா தனது சிறந்த மற்றும் கனிவான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. அவர் இந்தியாவை உலகிற்கு எடுத்துச் சென்றார். உலகின் சிறந்ததை நமது நாட்டுக்கு கொண்டு வந்தார். ரிலையன்ஸ், நீடா மற்றும் அம்பானி குடும்பத்தின் சார்பாக, டாடா குடும்பத்துக்கும், டாடா குழுமத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டு இருந்தார்.

The post மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்: பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article