
மும்பை,
10 அணிகளுக்கு இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 51 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதன் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்டன.
மீதமுள்ள 8 அணிகளுக்கு இடையே பிளே ஆப் சுற்று செல்வதற்கான போட்டி நிலவுகிறது. இவற்றில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் முறையே தலா 14 புள்ளிகள் பெற்று பிளே ஆப் முன்னேறுவதற்கான வாய்ப்பில் முன்னணியில் உள்ளன.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் கோப்பையை வெல்லப்போகும் அணிகள் குறித்து பல முன்னணி வீரர்ர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.
அவரது கணிப்பின் படி 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு' அணி கோப்பையை வெல்லும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், " என்னை பொறுத்தவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்களின் பேட்டிங் மற்றும் பீல்டிங் சிறப்பாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி அவர்களுக்கு அருகில் உள்ளது. ஆனால் அவர்கள் இப்போதுதான் தங்கள் எழுச்சியைத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு முன்னணி அணிகளுக்கு எதிராக மூன்று கடினமான போட்டிகள் வரவிருப்பதால், அவர்களால் அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? என்பதுதான் கேள்வி. அந்த வேகத்தை அவர்கள் எவ்வாறு தாங்கிக் கொள்வார்கள் என்பது முக்கியம். ஆனால் ஆர்சிபி நிச்சயமாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி"என்று கூறினார்.