
திருமலை,
ராமர் பிறந்த நட்சத்திரமான புனர்வசு நட்சத்திரத்தை முன்னிட்டு திருப்பதி கோதண்டராமர் கோவிலில் நேற்று புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகம் செய்யப்பட்டது.
மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை கோவிலின் ஊஞ்சல் மண்டபத்தில் அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் முழங்க, அர்ச்சகர்கள் விஷ்ணு காயத்ரி மந்திரத்தை 108 முறை ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க புஷ்ப யாகம் நடந்தது.
அதில் துளசி, சாமந்தி, கன்னேறு, மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, தாமரை, சம்பங்கி, தாழம்பூ என 12 வகையான மலர்கள், 6 வகையான இலைகள் என மொத்தம் 3 டன் மலர்களால் உற்சவர்களுக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. புஷ்ப யாகத்துக்காக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காணிக்கையாளர்கள் 3 டன் மலர்களை அனுப்பி வைத்தனர். புஷ்ப யாகம் முடிந்ததும் இரவு 7 மணியளவில் உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
புஷ்ப யாகம் குறித்து அர்ச்சகர்கள் கூறுகையில், கோவிலில் பிரம்மோற்சவம் அல்லது நித்ய கைங்கரியங்களின்போது அர்ச்சகர்கள், அதிகாரிகள் அல்லது பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால், அதற்கு பரிகாரமாக புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது. இந்த யாகம் செய்வதால் சகல தோஷங்களும் நீங்கும். இதோடு ராமர் பிறந்த நட்சத்திரமான புனர்வசு நட்சத்திரத்தை முன்னிட்டு புஷ்ப யாகம் நடத்தப்பட்டது, என்றனர்.
புஷ்ப யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.