
மும்பை,
மும்பையை சேர்ந்த 7 வயது சிறுமி 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளி அருகே சமோசா வாங்க சென்றாள். அப்போது 45 வயது நபர் ஒருவர் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து சாக்லெட் வாங்கி தருவதாக கூறி மறைவிடத்திற்கு கடத்தி சென்றார். அவர் அங்கு வைத்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். இதன்பின்னர் சிறுமியை அங்கேயே விட்டு விட்டு அந்த நபர் தப்பி ஓடி விட்டார். தனியாக தவித்து நின்ற சிறுமியை அந்த வழியாக சென்ற 2 பெண்கள் கண்டு விசாரித்தனர். இதன்பின்னர் அவர்கள் சிறுமியின் தாயை தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.
அப்போது நடந்த சம்பவத்தை சிறுமி தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளாள். உடனடியாக சிறுமியின் தாய் இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த நபரின் அடையாளம் தெரியவந்ததை தொடர்ந்து அவரை பிடித்து கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் இவர் மீது ஏற்கனவே 5 பாலியல் வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவருக்கு எதிராக சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நிறைவில் குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.