
சண்டிகர்,
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதல் நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமிர்தசரசில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளிலும் சைரன் ஒலிக்கப்பட்டு வருகிறது. மக்கள் பதற்றப்பட வேண்டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் அமிர்தசரசில் தரையிறக்க முயன்ற இண்டிகோ விமானம் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது.