முன்னாள் பாதுகாப்பு படையினரின் நலனுக்காக சன் டிவி ரூ.75 லட்சம் கொடி நாள் நிதி

5 hours ago 1

சென்னை: முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக கொடி நாள் நிதியாக 75 லட்சம் ரூபாயை சன் டிவி வழங்கியுள்ளது. ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், டிசம்பர் 7ம் தேதி நாடு முழுவதும் படைவீரர் கொடி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக கொடி நாள் நிதி வசூலிக்கப்படுகிறது. நாடுமுழுவதும் உள்ள லட்சக்கணக்கான முன்னாள் படை வீரர்கள் இந்த நிதியின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், சன் டிவி சார்பில், தமிழ்நாடு அரசுக்கு கொடி நாள் நிதியாக 75 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் சன் டிவி சார்பில் மல்லிகா மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்வின் போது, மாவட்ட துணை ஆட்சியர் ஹர்ஷத் பேகம், முன்னாள் ராணுவ வீரர்கள் நல வாரியத்தின் உதவி இயக்குநர் எட்வர்ட் ராஜ் மரியா ஜான், நரசிம்மன் உடனிருந்தனர். இந்திய பாதுகாப்பு படையின் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் நலனுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்விற்கும் பயன்படுத்தப்பட இருப்பதாக முன்னாள் ராணுவ வீரர்கள் நலவாரிய உதவி இயக்குநர் எட்வர்ட் ராஜ் மரியா ஜான் தெரிவித்தார்.

முன்னாள் படை வீரர்கள் நலனுக்காக தமிழ்நாடு அரசுக்கு கொடி நாள் நிதியாக சன் டிவி குழுமம் தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 2 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசுக்கு சன் டிவி குழுமம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கொடி நாள் நிதி வழங்கிய சன் டிவி, புயல், கொரோனா உள்ளிட்ட பேரிடர் நிகழ்வுகளின் போது, பல்வேறு அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும், ஏழை, எளிய மக்களுக்கான நலத்திட்டங்களுக்காகவும் சன் டிவி பல ஆண்டுகளாக நிதியுதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post முன்னாள் பாதுகாப்பு படையினரின் நலனுக்காக சன் டிவி ரூ.75 லட்சம் கொடி நாள் நிதி appeared first on Dinakaran.

Read Entire Article