
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தின் கோசி கொத்வாலி பகுதியில் வசித்து வரும் 25 வயது இளம்பெண்ணுக்கு வருகிற 27-ந்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. 23-ந்தேதி பொட்டு வைக்கும் நிகழ்ச்சிக்காக அந்த பெண் தயாரானார்.
இதற்காக வங்கிக்கு சென்று பணம் எடுத்து விட்டு வீடு திரும்பியபோது, முகமூடி அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவருடைய முகத்தில் ஆசிட் வீசிவிட்டு தப்பினர்.
இதில், அந்த இளம்பெண்ணின் முகம், கழுத்து மற்றும் தோள் பகுதியில் என மொத்தம் 60 சதவீதம் அளவுக்கு காயங்கள் ஏற்பட்டு, ஆசம்கார் பகுதியிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த இளம்பெண் போலீசாரிடம் கூறும்போது, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர், நீ எனக்கு கிடைக்கவில்லை என்றால், யாருக்கும் கிடைக்காமல் செய்து விடுவேன் என மிரட்டினார் என்று அதிகாரிகளிடம் கூறினார்.
இதுபற்றி போலீசார் விசாரித்தபோது, ராம் ஜனம் சிங் பட்டேல் என்ற நபருக்கு முன்பே திருமணம் நடந்த 4 குழந்தைகள் உள்ளன. அவர், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுடன் 5 ஆண்டுகளாக சட்டவிரோத காதல் உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், மற்றொரு நபருடன் அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் என அறிந்ததும், ராம் ஜனத்திற்கு ஆத்திரம் ஏற்பட்டது.
அவர், மனோஜ் யாதவ் மற்றும் சுரேந்திரா யாதவ் ஆகியோருடன் சேர்ந்து ஆசிட் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு 3 பேரும் கைது செய்யப்பட்டனர். பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.