
பகவான் மகா விஷ்ணுவுக்குரிய விரதங்களில் முதன்மையானது ஏகாதசி விரதம் ஆகும். ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை ஏகாதசி தினம் வரும். ஏகாதசி நாளில் விரதம் இருந்து இருந்து வழிபடும் பக்தர்களுக்கு நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் பகவான் அருள்வார் எனது ஐதீகம். அந்த வகையில் நாளை வரக்கூடிய ஏகாதசியானது மோகினி ஏகாதசி என அழைக்கப்படுகிறது.
மோகினி ஏகாதசியின் மகிமை
மோகினி ஏகாதசியன்று விரதம் இருந்து பகவானை வழிபட்டால், எத்தகைய பாவ விளைவுகளில் இருந்தும் விடுபட முடியும் என புராணங்கள் கூறுகின்றன. குறிப்பாக மோகினி ஏகாதசியானது பகவான் ஸ்ரீராமர் கடைப்பிடித்த விஷேசமான ஏகாதசி ஆகும்.
அதாவது, சீதையைப் பிரிந்து வேதனையில் இருந்த ஸ்ரீராமர், தனது குலகுருவான வசிஷ்டரிடம் தனது மனக்கஷ்டத்தை போக்கும் உபாயத்தை கேட்டார். அப்போது, மோகினி ஏகாதசியின் மகிமை குறித்து விளக்கிய வசிஷ்டர், அந்த விரதத்தை கடைப்பிடித்தால் மனவருத்தம் நீங்கும் என அறிவுறுத்தினார்.
வசிஷ்டரின் வழிகாட்டுதலின்படி ஸ்ரீ ராமபிரான், முறையாக மோகினி ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து தனது மனவருத்தம் நீங்கப்பெற்றார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
விரத முறை
ஏகாதசிக்கு முந்தைய நாளான இன்று (தசமி தினம்) கடைசி உணவை சூரிய அஸ்தமனத்திற்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம். நாளை வியாழக்கிழமை முழுவதும் உபவாசம் இருந்து மறுநாள் (வெள்ளிக்கிழமை) துவாதசியில் விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.
ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பது எந்த அளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அடுத்த நாள் துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்தில் விரதத்தை முடிப்பதாகும். ஒவ்வொரு மாதமும் ஏகாதசி நாட்கள் மற்றும் விரதம் முடிக்க வேண்டிய நேரம் குறித்து இஸ்கான் சார்பில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
தமிழகத்தின் தென்மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் நாளை (மே 8ம் தேதி) ஏகாதசி விரதம் கடைபிடிக்க வேண்டும் என்றும், மறுநாள் (மே 9ம் தேதி) காலை 6.10 மணி முதல் 09.55 மணிக்குள் விரதம் முடிக்க வேண்டும் என்றும் நெல்லை இஸ்கான் அறிவுறுத்தி உள்ளது.
ஏகாதசி விரத காலத்தில் அரிசி முதலிய தானிய உணவுகளை தவிர்க்கவேண்டும். முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் போன்றவற்றை சாப்பிடலாம். விரத காலத்தில் பகவானின் நாமத்தை உச்சரிப்பது முக்கியம். ஏகாதசி அன்று கோவில்களுக்குச் சென்று பகவானை தரிசிக்க வேண்டும். ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை நூல்களை படிப்பதும், கேட்பதும் மிகவும் நல்லது.