பயங்கரவாத வேட்டையில் சாதித்த '2 பெண் சிங்கங்கள்'

14 hours ago 1

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி நடத்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், அனைவரும் ஆண்கள். பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற பிறகு, கதறி அழுத அவர்களின் மனைவிகளிடம், இங்கு நடந்ததை மோடியிடம் போய் சொல்லுங்கள் என்று பயங்கரவாதிகள் ஆணவத்துடன் கூறிவிட்டு சென்றனர்.

அதற்கு பதிலடியாக, பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இன்று காலை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலுக்கு இந்திய அரசின் 2 பெண் சிங்கங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். யார் அவர்கள் என்பதை இனி விரிவாக காண்போம்.


விமானப்படை கமாண்டர் வியோமிகா சிங்:-

இவர் ஹெலிகாப்டர் இயக்குவதில் சிறப்பு வாய்ந்தவர். இதுவரை 2,500 மணி நேரத்திற்கும் மேலாக ஹெலிகாப்டர்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். கடினமான நிலப்பரப்புகளை கொண்ட சேடக் மற்றும் சீட்டா போன்ற இடங்களில் ஹெலிகாப்டர்களை சாதாரணமாக தரையிறக்கி உள்ளார்.

பல மீட்புப் பணிகளில் முக்கிய பங்காற்றி உள்ளார். குறிப்பாக, 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் மோசமான வானிலையிலும் தொலைதூரம் பறந்து உயரமான இடங்களில் சிக்கியிருந்த மக்களை துணிச்சலாக சென்று காப்பாற்றினார்.

கடந்த 2021-ம் ஆண்டு, 21,650 அடி உயரமுள்ள மவுண்ட் மணிராங் மலை ஏறும் பயணத்தில் 3 மகளிர் படைப்பிரிவில் இடம் பெற்றிருந்தார். இந்த சாதனை உயர் பாதுகாப்பு அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டது.

தற்போது "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதலில் 3 படைப்பிரிவுகளின் ஊடகக் குழுவுக்கு அவர் தலைமை தாங்கியதன் மூலம் தேசிய கவனத்தைப் பெற்றுள்ளார். விமானி ஆகவேண்டும் என்று சிறு வயது முதலே அவரது கனவாக இருந்துள்ளது. அவரது பெயரில் உள்ள "வியோமிகா," என்பதன் பொருள், வானம் தொடர்பானது என்பதாகும்.



2 பெண் சிங்கங்களில் மற்றொருவர் கர்னல் சோபியா குரேஷி:-

இந்திய ராணுவத்தின் சிக்னல்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற அதிகாரி ஆவார். அவர் தனது ராணுவ வரலாற்றில் பல சாதனைகளை படைத்துள்ளார். 2016-ம் ஆண்டு பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவக் குழுவுக்குத் தலைமை தாங்கிய முதல் பெண் அதிகாரி ஆவார். "எக்சர்சைஸ் போர்ஸ் 18" என்ற பெயரில் நடைபெற்ற பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவப் பயிற்சிப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றார். இது இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய வெளிநாட்டு ராணுவப் பயிற்சியாகும். 18 நாடுகள் பங்கேற்ற இந்த பயிற்சியில், அவர் மட்டுமே பெண் தளபதியாக இருந்தார்.

2006-ம் ஆண்டு காங்கோவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் பல ஆண்டுகளாக அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், போர் நிறுத்தங்களைக் கண்காணிப்பது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவது போன்ற பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

கர்னல் குரேஷியின் தாத்தா இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். மேலும், அவர் மெக்கானைஸ்டு காலால் படையைச் சேர்ந்த ஒரு அதிகாரியை மணந்துள்ளார். ஆகையால், ராணுவத்துடனான தொடர்பு அவருக்குப் பரம்பரையாக இருந்து வந்துள்ளது.

இளம் பெண்களை ராணுவத்தில் சேர ஊக்குவிக்கும் வகையில், "முடியுமானால், இந்திய ராணுவத்தில் சேருங்கள்" என்பதே அவரது செய்தி. "பாலின வேறுபாடின்றி திறமைக்கும், தலைமைப் பண்புகளுக்கும் ராணுவம் முக்கியத்துவம் அளிக்கிறது" என்று அவர் மற்றவர்களை ஊக்கப்படுத்துகிறார்.

Read Entire Article