
பெய்ஜிங்,
காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. இன்று மாலை இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு இந்திய ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியது. ஆனால் பாகிஸ்தான் ராணுவ தளங்களை குறிவைத்து எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதிகளை குறிவைத்து இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கைகள் குறித்து சீனா கவலை தெரிவித்துள்ளது. பதட்டங்கள் அதிகரிப்பதைத் தவிர்க்குமாறு இரு நாடுகளையும் அது வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் , "இந்தியாவில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கை 'வருந்தத்தக்கது', இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம். இந்தியாவும், பாகிஸ்தானும் எப்போதும் ஒருவருக்கொருவர் அண்டை நாடுகளாகவே இருக்கும். அவர்கள் சீனாவின் அண்டை நாடுகளும் கூட..
சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலனுக்காக இரு தரப்பினரும் செயல்படவும், அமைதியாக இருக்கவும், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை மந்திரியான முகமது இஷாக் உடன் சீன நாட்டின் தூதர் ஜியாங் ஜைடோங் சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பாகிஸ்தான் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.