முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் இன்றும் சோதனை

3 months ago 15

சென்னை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின், அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக்குழுவில் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையில் வைத்திலிங்கம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கத்தின் சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகார் மனு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விரிவான விசாரணை நடத்தினார்கள். இதில் வைத்திலிங்கம் மீதான முறைகேடு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு, அவர்கள் நடத்தி வந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குனர் பன்னீர்செல்வம், ஸ்ரீராம் குழும கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் ரமேஷ் ஆகிய 5 பேர் மீதும், 6 நிறுவனங்கள் மீதும் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். முறைகேடான பணபரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ் வைத்திலிங்கம் மீதும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீதும் தனியாக வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து நேற்று காலை 7.30 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் 15 பேர் கொண்ட குழுவினர் 5 கார்களில் ஒரத்தநாடு அருகேவுள்ள தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள வைத்திலிங்கம் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். இதேபோல் தஞ்சை அருளானந்த நகரில் உள்ள வைத்திலிங்கத்தின் மூத்த மகன் பிரபு வீட்டிலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல் வைத்திலிங்கத்தின் மைத்துனரும், பிரபுவின் மாமனாருமான பன்னீர்செல்வம் வீட்டில் சோதனை செய்வதற்காக பேய்க்கரும்பன் கோட்டைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால் அங்கு வீடு பூட்டியிருந்ததால் அதிகாரிகள் திரும்பி வந்துவிட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து பன்னீர்செல்வத்தின் உறவினர்களை அழைத்துக் கொண்டு அதிகாரிகள் சென்றனர்.

அங்கு பூட்டியிருந்த வீட்டை உறவினர்கள் முன்னிலையில் உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்று சோதனை நடத்தினர். மேலும் பிரபுவின் மனைவி, மாமியாரையும் வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முன்னதாக அவர்களை தஞ்சையில் இருந்து அமலாக்கத்துறைக்கு சொந்தமான காரில் அவர்களை ஏற்றி செல்ல ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வைத்திலிங்கத்தின் சென்னை அலுவலகம், சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் உள்ளது. அங்கும் நேற்று காலையில் 6-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அசோக் நகரில் வைத்திலிங்கத்தின் மகன்கள் நடத்தும் நிறுவனங்கள் உள்ளன. இங்கு சோதனை நடத்த வந்தபோது அலுவலகம் பூட்டி இருந்ததால், 2 மணி நேரம் காத்திருந்தனர். பின்னர் சாவியை வாங்கி அந்த நிறுவனங்களின் அலுவலகங்களில் சோதனையை நடத்தினர்.

இந்த வழக்கில் புகார் கூறப்பட்ட ஸ்ரீராம் குழும அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக சென்னை எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதுதவிர வைத்திலிங்கம் தொடர்புடைய கட்டுமான நிறுவனததில் பணிபுரியும் ரவிச்சந்திரன் என்பவரது வீடு சென்னை திருவேற்காடு கோ ஆப்ரேட்டிவ் நகர் அண்ணம்மாள் தெருவில் உள்ளது. அங்கும் நேற்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இவ்வாறு நேற்று ஒரே நாளில் சென்னை, தஞ்சையில் 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாகவும், சோதனை முடிந்த பிறகு அதுபற்றிய விவரம் தெரிவிக்கப்படும் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் குடும்பத்தினருக்கு சொந்தமான 6 இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்றும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Entire Article