வந்தே பாரத் ரெயிலை வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன: மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்

3 hours ago 1

டாவோஸ்,

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. கடந்த 20-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களின் செயல் அதிகாரிகளிடம் நாடுகள் மற்றும் மாநிலங்கள் சார்பில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் கோரப்படும்.

இதற்காக இந்தியா சார்பில் 5 மத்திய மந்திரிகள் மற்றும் 3 மாநில முதல்-மந்திரிகள் அடங்கிய மிக பெரிய குழு சென்றுள்ளது. கட்சி வேற்றுமையின்றி இந்தியாவின் வளர்ச்சி ஒன்றையே இலக்காக கொண்டு அனைவரும் பேசி வருகின்றனர்.

இவற்றில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஸ்டீல், சிமெண்ட், உட்கட்டமைப்பு, மின்சார வாகனங்கள், பெட்ரோகெமிக்கல்ஸ், பாலியஸ்டர், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உயிரியாற்றல், பசுமை ஹைட்ரஜன், பசுமை இரசாயனங்கள், தொழில்துறை வளர்ச்சி, சில்லரை விற்பனை, தரவு மையங்கள், தொலைத்தொடர்பு மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் முதலீட்டுக்கான ஒப்பந்தம் போடப்பட்டு வருகின்றன.

இந்த மாநாட்டில் இன்று பங்கேற்று பேசிய மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவில் அரை கடத்திகள், உணவு பதப்படுத்துதல், தொழிற்சாலை பொருட்கள், முதலீட்டு பொருட்கள் மற்றும் பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டப்படுகிறது என்றார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ரெயில்களை வெளிநாடுகள் இறக்குமதி செய்வது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவில் இருந்து வந்தே பாரத் ரெயிலை இறக்குமதி செய்ய பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன என கூறினார்.

அவர் தொடர்ந்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த சிலர் என்னிடம் கூறும்போது, அவர்கள் இந்தியாவில் இருக்கும்போது, அவர்களுடைய குழந்தைகள் வந்தே பாரத் ரெயிலில் அமர வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர் என கூறினார்கள் என்று மந்திரி கூறினார்.

நாட்டில் முதன்முறையாக 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் புதுடெல்லியில் இருந்து வாரணாசி நோக்கி வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் கான்பூர் மற்றும் அலகாபாத் வழியே சென்றது.

இதேபோன்று மற்றொரு கேள்விக்கு ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறினார். இவற்றில் மராட்டியம் ரூ.16 லட்சம் கோடி, தெலுங்கானா ரூ.60 ஆயிரம் கோடி மற்றும் ஆந்திர பிரதேசம் ரூ.2 முதல் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளன என அவர் கூறியுள்ளார்.

Read Entire Article