புதுச்சேரி, பிப். 12: புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் சிலிண்டர் ஏஜென்சியில் பணம் மற்றும் காலி சிலிண்டர்கள் ஒப்படைக்காமல் முறைகேடு செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி சொக்கநாதன்பேட் வழுதாவூர் ரோட்டில் வசிப்பவர் முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள். இவர் மூலகுளத்தில் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் வாழைக்குளத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் ரத்தினம் என்பவர் வீட்டு உபயோக சிலிண்டர்களையும், வர்த்தக சிலிண்டர்களையும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் வர்த்தக சிலிண்டர்களை விற்றபோது, அதற்கு உண்டான பணத்தையும், காலி சிலிண்டர்களையும் ஏஜென்சிக்கு செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளார்.
அந்த தொகையை நாளை கட்டி விடுகிறேன், மறுநாள் கட்டி விடுவேன் என கூறி ₹1 லட்சத்து 2 ஆயிரத்து 503 வரை பாக்கி வைத்துள்ளார். மேலும், ஏஜென்சிக்கு சொந்தமான 19 கிலோ எடை கொண்ட 27 காலி வர்த்தக சிலிண்டர்கள் மற்றும் 5 கிலோ எடை கொண்ட 4 காலி சிலிண்டர்களை ஒப்படைக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். யாரிடம் சிலிண்டர் விநியோகம் செய்தார் என்ற தகவலையும் ஆனந்தகுமார் ரத்தினம் கொடுக்கவில்லை. தொடர்ந்து, ஏஜென்சி மூலம் பணத்தையும், காலி சிலிண்டர்களையும் கேட்டு வந்தபோது, அவர் வேலைக்கு வராமல் தலைமறைவாகியுள்ளார். மேலும், அவர் ஏஜென்சிக்கு சொந்தமான வர்த்தக காலி சிண்டர்களை வைத்து சட்டத்திற்கு புறம்பாக வீட்டு உபயோக சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பி ஓட்டல்களில் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து தனது பணத்தையும், காலி சிலிண்டர்களையும் மீட்டு தர வேண்டும் என்று புதுச்சேரி நீதிமன்றத்தில் பெத்தபெருமாள் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜகுமரேசன், இந்த புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்பேரில் கோரிமேடு சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post முன்னாள் அமைச்சரின் சிலிண்டர் ஏஜென்சியில் ஊழியர் முறைகேடு appeared first on Dinakaran.