சென்னை: செங்கல்பட்டு அருகே நடுரோட்டில் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த கார் மோதி குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை அகலப்பதும்பூர் ஜானகிபுரத்தை சேர்ந்தவர் அய்யனார் (56). இவரது மனைவி தெய்வபூஞ்சாரி (52). இவர்களது மகன் கார்த்திக் (36). இவரது மனைவி நந்தினி (32). இவர்களுக்கு இளமதி (7), சாய்வேலு (1) என்ற குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மற்றும் உறவினர் சரவணன் உட்பட 7 பேர், சில தினங்களுக்கு முன், சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்றுள்ளனர். அங்கு சில விசேஷங்களில் கலந்து கொண்ட பிறகு நேற்று முன்தினம் நள்ளிரவு, மீண்டும் மதுரைக்கு காரில் புறப்பட்டனர்.
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற டாரஸ் லாரியை, அதன் ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டு நிறுத்தி உள்ளார். இதனால், பின்னால் வந்த அய்யனார் குடும்பத்தினரின் கார், டாரஸ் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த காருக்கு பின்னால் வந்த மற்றொரு லாரியும், கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் இரு லாரிகளுக்கும் இடையே கார் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் அய்யனார், சரவணன், சாய்வேலு ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். உடன் வந்த கார்த்திக், நந்தினி, இளமதி, தெய்வபூஞ்சேரி ஆகிய 4 பேர் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்து கொண்டிருந்தனர். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போலீசார், கார் இடிபாடுகளில் இருந்து படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும், இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு படுகாயமடைந்த அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில், இளமதி என்ற சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் ேமலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து செயல்பட்டு, விபத்தில் சிக்கிய வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய டாரஸ் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
The post முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் 2 லாரிகளுக்கு இடையே கார் சிக்கி 3 பேர் பரிதாப பலி: சிறுமி சீரியஸ் appeared first on Dinakaran.