திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி கோயில் உள்ளது. இந்த சாமி பெயரில் தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வடக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓட்டல் நடத்தி வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் தை, மாசி மாதங்களில் முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா நடத்துவர்.
இதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் காலை துவங்கியது. இதையொட்டி வடக்கம்பட்டி, அலங்காரபுரம், பொட்டல்பட்டி கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலை 100க்கும் மேற்பட்ட பெண்கள் மலர் தட்டுகளை ஏந்தியும், சுவாமிக்கு நேர்த்திக்கடன் விட்ட ஆட்டுக்கிடாக்கள் மற்றும் சேவல்களை ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் நிலைமாலை சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
இதில் மதுரை, விருதுநகர் மற்றும் திருப்பூர், திருச்சி, சேலம், சென்னை, நெல்லை மற்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் முனியாண்டி விலாஸ் பெயரில் ஓட்டல் நடத்தி வரும் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டது.
பின் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 150 கிடாக்கள், 300 சேவல்களை பலியிட்டு விடிய விடிய கமகக்கும் பிரியாணி தயாரிக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு முனியாண்டி சுவாமி மற்றும் கருப்பசாமிக்கு படையலிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பிரியாணியை வாங்கி சென்றனர். கோயில் பிரியாணி பிரசாதத்தை சாப்பிட்டால் நோய், நொடி வராது என்பது இப்பகுதி மக்களின் ஐதீகமாக உள்ளது.
The post முனியாண்டி சுவாமி கோயில் திருவிழாவில் 150 ஆடுகள், 300 சேவல்களை பலியிட்டு பிரியாணி பிரசாதம்: திருமங்கலம் அருகே திரண்ட பக்தர்கள் appeared first on Dinakaran.