விருதுநகர்: விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ கால் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வெம்பக்கோட்டை வைப்பாற்றின் கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வுப் பணியில் 3,254 பொருள்கள் கண்டறியப்பட்டு, அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டது. இதே பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணியில் 2ம் கட்ட அகழாய்வில் மட்டும் 984 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து 3ம் கட்ட அகழாய்வு பணிகள் ஜூன் 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் சுடுமண் முத்திரை, கண்ணாடி மணிகள், மண் குடுவை, மண்பாண்ட பாத்திரங்கள் உள்பட 3,250க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வில் கூடுதலாக சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ பொம்மையின் கால் பகுதி சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது. சிறுவர்கள் விளையாட பயன்படுத்தும் சிறிய அளவிலான மண்குடுவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளை நிற சங்கு வளையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் கூறியதாவது; தொல் பொருட்களை ஆவணப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னோர்கள் இப்பகுதியில் வசித்து தொழிற்கூடங்கள் நடத்தியதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்து வருகின்றன. அகழாய்வு முழுமையாக முடிவடைந்த 8 குழிகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள 8 குழிகளை பிற மாவட்டங்களில் இருந்து கல்லூரி, பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள், பார்வையிட வருவதால் மூடப்படாமல் உள்ளது. விரைவில் கூடுதலாக அகழாய்வு குழிகள் தோண்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ கால் பகுதி கண்டெடுப்பு!! appeared first on Dinakaran.