கொழும்பு: இலங்கையில் இந்தியா, தென்ஆப்ரிக்கா, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டி நடைபெற்று வந்தது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா 3, இலங்கை 2 வெற்றிகளுடன் முதல் 2 இடங்களை பிடித்து பைனலுக்கு தகுதி பெற்றன. நேற்று கொழும்பில் நடந்த பைனலில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 342 ரன் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 116, ஹர்லீன் தியோல் 47, கேப்டன் ஹர்மன்பிரீத் 41, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இலங்கை 48.2 ஓவரில் 245 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 97 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ஆட்டநாயகியாக மந்தனாவும், தொடர் நாயகியாக 15 விக்கெட் எடுத்த இந்தியாவின் சினே ராணாவும் தேர்வாகினர்.
வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், முழு அணியையும் குறிப்பாக வீராங்கனை களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம். நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்பினோம். நாங்கள் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். நாங்கள் விளையாடிய விதத்தில் மகிழ்ச்சி. தொடரில் நாங்கள் ஒருபோதும் மேம்படுவதை நிறுத்த விரும்பவில்லை. எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து காயமடைகிறார்கள், அதை நாங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.
இந்த தொடர் முழுவதுமே ஸ்மிருதி மந்தனாவின் பேட்டிங் அபாரமாக இருந்தது. குறிப்பாக பைனலில் அவரது பேட்டிங் திறன் எங்களுக்கு புத்துணர்ச்சியை தந்தது. மேலும் பிரதிகா ராவல், ரோட்ரிக்ஸ், தியோல் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை தந்தனர். நானும் ஸ்மிருதியும் தவிர மற்ற வீராங்கனைகளும், அவர்கள் பேட்டிங் செய்த விதமும் மகிழ்ச்சியளிக்கிறது. சினே ராணா பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார்’’ என்றார். ஆட்டநாயகி மந்தனா கூறுகையில், தொடரின் அனைத்து பிட்சுகளும் உண்மையில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தன. பந்து வீசுவதற்கு அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்’’ என்றார்.
The post முத்தரப்பு தொடர் பைனலில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன்; அணியின் பேட்டிங்கை நினைத்து பெருமைப்படுகிறேன்: இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் மகிழ்ச்சி appeared first on Dinakaran.