
சென்னை,
தமிழகம் முழுவதும் இன்று 1,000 முதல்வர் மருந்தகங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதற்கான விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. சென்னை பாண்டி பஜாரில் கூட்டுறவுத்துறை மூலம் அமைக்கப்பட்டு உள்ள முதல்வர் மருந்தகத்தை அவர் பார்வையிட்டார். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
நீரழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும். மக்கள் மீதான பொருளாதார சுமையை குறைக்கவே முதல்வர் மருந்தகங்களை திறக்க திட்டமிட்டோம். சாமானிய மக்களுக்கான அரசு என்பதற்கு உதாரணம் தான் இந்த முதல்வர் மருந்தகங்கள். மாவட்ட மருந்துக் கிடங்குகளில் 3 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. முதல்வர் மருந்தகங்களுக்கு 48 மணி நேரத்தில் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும். 'முதல்வர் மருந்தகங்களில் 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்கப்படும்' என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தை தமிழக அரசு காப்பியடித்துள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக மீம்ஸ் ஒன்று சமூகவலைதளத்தில் பதிவிட்டு, 'நகல் என்றுமே அசல் ஆக முடியாது' என அண்ணாமலை பதிவிட்டுள்ளார். இந்த மீம்ஸ் படத்தை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைராலாக்கி வருகின்றனர்.