கோவை மாவட்ட முன்னாள் கலெக்டருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.

4 hours ago 2

சென்னை,

கோவையைச் சேர்ந்த முதியவர் ஜான் சாண்டி (வயது 74). இவருக்குச் சொந்தமான நிலத்தின் பட்டா தொடர்பான ஆவணத்தில் 2 பேரின் பெயரை நீக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு பெயரை நீக்குவது தொடர்பாக 2 மாத காலத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கடந்த 2023ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் 2 மாதங்கள் ஆகியும் இது தொடர்பாக உரிய உத்தரவை அப்போதைய கோவை மாவட்ட கலெக்டராக இருந்த கிராந்தி குமார் பாடி பிறப்பிக்கவில்லை.அதோடு இது தொடர்பாக, மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர் கோவிந்தன் உள்ளிட்டோர் உரிய பணியை மேற்கொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து மனுதாரர் ஜான் சாண்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த வழக்கானது நீதிபதி வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஐகோர்ட்டு உத்தரவிட்ட காலத்தில் உரிய விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்காத கோவை மாவட்ட முன்னாள் கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, வருவாய்க் கோட்டாட்சியர் கோவிந்தன், கோவை வடக்கு வட்டாட்சியர் மணிவேல் உள்ளிட்டோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.அபராதம் விதிக்கப்பட்ட 3 பேரும் தங்களுடைய ஊதியத்திலிருந்து மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். அதோடு இந்த உத்தரவை அமல்படுத்தத் தவறிய வட்டாட்சியர் மணிவேலுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அவரது ஒரு மாத ஊதியத்தை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். அதே சமயம் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதற்கு ஏதுவாக வட்டாட்சியருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மட்டும் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்படுகிறது" என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதே போன்று மற்றொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டாட்சியர் வெங்கட்ராமனுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article