முதல்வர் உத்தரவின் பேரில் மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதற்கு அரசு விழிப்புடன் உள்ளது தென்காசி மாவட்டத்தில் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார்

4 weeks ago 5

*குளங்களில் உடைப்புகளை சரி செய்ய 7,500 மணல் மூடைகள்

*நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் தேவையான நடவடிக்கை

*அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் தகவல்

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் முதல்வர் உத்தரவின் பேரில் மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதற்கு அரசு விழிப்புடன் உள்ளது எஸ்டிஆர்எப், என்டிஆர்எப் ஆகிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தெரிவித்தார். குற்றாலத்தில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பார்வையிட்டார். பின்னர் குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள 77 நரிக்குறவர் குடும்பங்களைச் சேர்ந்த 277 நரிக்குறவர் இன மக்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு அரிசி, பருப்பு, எண்.ணெய், தட்டு, போர்வை, பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

ஆய்வின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர், மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், எம்எல்ஏக்கள் பழனிநாடார், ராஜா, டிஆர்ஓ ஜெயச்சந்திரன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், ஆர்டிஓ லாவண்யா, தாசில்தார் ராம்குமார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, முத்துப்பாண்டி, ஆறுமுகச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் செங்கோட்டை ரஹீம், ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், சுரண்டை நகர செயலாளர் கணேசன், பேரூர் செயலாளர்கள் குட்டி, சுடலை, முத்தையா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, துணை அமைப்பாளர்கள் ஐவேந்திரன்தினேஷ், சிவக்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், தென்காசி மாவட்டத்தில் 20 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது. தரைப்பகுதியை விட மலைப்பகுதியில் அதிக மழை பெய்ததால் ஆறுகளிலும் நீர்வீழ்ச்சிகளிலும் அதிகமான தண்ணீர் வருகிறது. தென்காசி சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான சங்கர் வருகை தந்துள்ளார். மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதற்கு அரசு விழிப்புடன் உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 40 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. குளங்களில் உடைப்புகளை சரிசெய்ய 7,500 மணல் மூடைகள் தயார் நிலையில் உள்ளது. தற்போது ஏழு முகாம்களில் மட்டும் 153 குடும்பங்களை சேர்ந்த 503 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை நான்கு வீடுகள் இடிந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் கணக்கெடுப்பு பணி தொடரும். பயிர் சேதம் குறித்து மழை நின்றவுடன் வருவாய்த் துறையும் விவசாயத் துறையும் இணைந்து கணக்கெடுப்பார்கள்.

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 958 குளங்கள் உள்ளது. இவற்றில் 44 குளங்கள் முழுமையாக நிரம்பி இருக்கிறது. மீதமுள்ள 914 குளங்கள் ஓரளவு நிரம்பி வருகிறது. மழை நின்ற பிறகு அது குறித்து கணக்கெடுக்கப்படும். ஒன்று, இரண்டு இடங்களில் மட்டும் குளங்கள் லேசாக உடைப்பு ஏற்பட்டுள்ளது.‌ பெரிய பாதிப்பு இல்லை. நான்கு கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எஸ்டிஆர்எப், என்டிஆர்எப் ஆகிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.

தகவல் தெரிவித்தால் சில மணி நேரங்களில் வந்து விடுவார்கள். தஞ்சை மாவட்டம் போன்று கால்வாய்களை தூர் வாருவதற்கு கலெக்டருடன் ஆலோசனை நடத்தி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.‌ பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அளவிற்கு பெரிய பாதிப்பு இல்லை. வரவும் கூடாது’ என்றார்.

The post முதல்வர் உத்தரவின் பேரில் மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதற்கு அரசு விழிப்புடன் உள்ளது தென்காசி மாவட்டத்தில் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் appeared first on Dinakaran.

Read Entire Article