திருக்கோயில் பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் கருணைக் கொடை ரூ.1,000/- : அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்!!

2 hours ago 2

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (13.01.2025) ஆணையர் அலுவலகத்தில் திருக்கோயில் பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் கருணைக் கொடையாக வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 16 நபர்களுக்கு ரூ.1,000/-க்கான காசோலைகளை வழங்கினார்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

“தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடைபெற்று வருவதோடு, திருக்கோயில் சொத்துகளை மீட்டெடுத்து பாதுகாக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அரசு பொறுப்பேற்றபின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 558 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதோடு, கருணை அடிப்படையில் துறையில் 29 பணியாளர்களும், திருக்கோயில்களில் 118 பணியாளர்களும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நீண்ட காலம் பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்த கூடுதல் ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர், பதிவறை எழுத்தர் உள்ளிட்ட 920 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, அவர்களின் விருப்பப்படி பணியிட மாறுதல்களும் வழங்கப்பட்டன.

கொரோனா காலத்தில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உதவித்தொகையாக ரூ.4000/- மற்றும் ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது. திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் வழிபாடு செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 சதவீதம் பங்கு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகளும், சீருடைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

ஒருகால பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள 17,000 திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- உதவித் தொகையாக வழங்கப்படுவதோடு, அவர்களது குழந்தைகளின் மேற்படிப்பிற்கு கல்வி உதவித்தொகையாக ரூ.10,000/- வீதம் 2 ஆண்டுகளில் 900 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் திருக்கோயில்களில் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் 1,327 திருக்கோயில் பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அரசு பொறுப்பேற்றபின், அர்ச்சகர்கள் உள்ளிட்ட அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் ஆண்டிற்கு ஒருமுறை முழு உடற்பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டு இதுவரை 16 இணை ஆணையர் மண்டலங்களில் 12,129 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். ரூ.136.66 கோடி மதிப்பீட்டில் 500 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைத் தொகை ரூ.3000-மாகவும், ஓய்வூதியம் ரூ. 4,000 -மாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ. 2,000 -மாகவும், கிராமக் கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ரூ.4,000- மாகவும் உயர்த்தி வழங்கிய அரசு திராவிட மாடல் அரசாகும்.

மேலும், 2,516 ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக் கொடையாக கடந்தாண்டு முதல் ரூ.1,000/-வழங்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, இன்றைய தினம் திருக்கோயில் பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1,000/- பொங்கல் கருணைக் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. பணியாளர் சேமநலநிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் 969 நபர்கள் தங்களுக்கும் பொங்கல் கருணைக் கொடை வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கை முதலமைச்சர் அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களுக்கு வழங்கிட முயற்சிகள் மேற்கொள்வோம்.

கோட்டூர்புரம், அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமாக கோட்டூர்புரம் பகுதியில் ஒரு திருமண மண்டபம் அமைந்துள்ளது. அதனருகில் மீதமுள்ள 31 சென்ட் இடத்தில் 1994 ஆம் ஆண்டிலிருந்து 16 நபர்கள் குடியிருந்து வருகின்றனர். அந்த இடத்தின் முன்பகுதியானது பெருநகர சென்னை மாநகராட்சிக்கும், பின்பகுதியானது திருக்கோயிலுக்கும் சொந்தமானதாகும். இரண்டு துறைகளும் ஒருங்கிணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டிலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட துறை ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த அரசு ஏற்பட்டவுடன் 6 முறை துறையின் மூலம் சட்டப்பிரிவு 78-ன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் ஒரு குடியிருப்பானது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் தந்தை தாமோதரன் பெயரில் திருக்கோயில் இடம் 325 சதுரடி, மாநகராட்சி இடம் 328 சதுரடி என மொத்தம் 653 சதுரடி உள்ளது. திருக்கோயில் நிலங்களை சட்டத்திற்கு புறம்பாக எவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும், அதனை அகற்றுவதற்கு எவ்வித தயக்கமும் காட்ட கூடாது என முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதுவரை சுமார் ரூ.7,126 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சட்டப்படி கோட்டூர்புரம் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள 16 குடியிருப்புகளையும் நியாய வாடகையின்படி வாடகைதாரர்களாக ஏற்பதா அல்லது ஆக்கிரமிப்பிலிருந்து அவர்களை வெளியேற்றுவதா என்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதில் மாநகராட்சியும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் இருப்பதால் அவர்களுடன் ஒருங்கிணைந்து இந்த பணிகளை விரைவாக முடிப்போம். திருக்கோயில் நிலங்கள் பாதுகாப்போம் என்பதனை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் இரா. சுகுமார், இ.ஆ.ப., தனி அலுவலர் (ஆலய நிர்வாகம்) திருமதி சு.ஜானகி இணை ஆணையர்கள் திரு.பொ.ஜெயராமன், திரு.சி. இலட்சுமணன், திருமதி இரா.வான்மதி, திருமதி பெ.க.கவெனிதா, உதவி ஆணையர் திரு.கி.பாரதிராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருக்கோயில் பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் கருணைக் கொடை ரூ.1,000/- : அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்!! appeared first on Dinakaran.

Read Entire Article