புதுடெல்லி: முதல் திருமணத்தில் இருந்து சட்டப்பூர்வமாக விலகவில்லை என்றாலும் 2வது கணவரிடம் ஜீவனாம்சம் பெறுவதற்கு பெண்களுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தெலங்கானாவில் பெண் ஒருவர் கடந்த 2005ம் ஆண்டு தனது கணவரிடம் இருந்து பிரிந்து செல்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் அவர் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. பின்னர் அவர் தனது பக்கத்துவீட்டில் இருந்தவரை 2005ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து 2வது கணவர் தனது திருமணத்தை ரத்து செய்யக்கோரினார். இது தொடர்பாக குடும்பநல நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார். பின்னர் இருவரும் சமரசம் செய்துகொண்டு மறுமணம் செய்து கொண்டனர். இது ஐதராபாத் அலுவலகத்தில் இந்த திருமணம் பதிவு செய்யப்பட்டது. 2008ம் ஆண்டு தம்பதிக்கு மகள் பிறந்தார். இந்நிலையில் தம்பதியினர் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த பெண் தனக்கும், தனது மகளுக்கும் பராமரிப்பு தொகையை இரண்டாவது கணவர் வழங்க வேண்டும் என்று கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றமும் இரண்டாவது கணவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவர் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதில் நீதிமன்றம் குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.
இதனைதொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி நாகரத்னா மற்றும் நீதிபதி சதீஷ் சந்திரா சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தனது மனைவி முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறவில்லை என்றும் எனவே அவரை சட்டப்பூர்வ மனைவியாக கருத முடியாது என்றும் நீதிமன்றத்தில் இரண்டாவது கணவர் வாதிட்டார்.
ஆனால் இரண்டாவது கணவரின் வாதத்தை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 125 ஆனது, 2024ம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்த, பாரதிய நாகரிக் சுரஷா சன்ஹிதாவின் பிரிவு 144ல் மாற்றப்பட்டுள்ளது என்றனர். மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்குவதற்கு இரண்டாவது கணவருக்கு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
The post முதல் திருமணம் சட்டப்பூர்வமாக நீடித்திருந்தாலும் 2வது கணவரிடம் ஜீவனாம்சம் பெற பெண்களுக்கு உரிமை உண்டு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.