பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாக்கப்பட்டதன் பின்னணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2 hours ago 2

‘‘விடுதி மாணவர் உணவு கட்டணத்தை அதிகாரிகள் சுருட்டுறதா புகார் வருதே.. என்னா விஷயம்..’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் அரசுத்துறை விடுதிகள் மீது அடுக்கடுக்கான புகார்கள் இயக்குநர் அலுவலகத்திற்கு பறந்திருக்கிறதாம். இந்த மாவட்டத்தில் ராஜா தேசிங்கு ஆட்சி செய்த கோட்டை தாலுகாவில் உள்ள விடுதிகளில் பல்வகை செலவினம் என்ற கணக்கில் மாணவர்களுக்கான உணவு கட்டணங்களை அதிகாரிகள் சுருட்டியிருக்கிறார்களாம்.

துறை தாலுகா அதிகாரியுடன் சம்மந்தப்பட்ட விடுதி வார்டன்கள் சேர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக மாவட்ட துறை நல அலுவலகத்திற்கு தகவல் பறந்திருக்கிறதாம். அதுமட்டுமா.. கடந்த இலை ஆட்சியில் கல்லூரி மாணவர் விடுதியில் தூய்மைப் பணிக்கு லேடி ஒருவரை நியமித்தார்களாம். ஆனால் அவரோ விடுதி பக்கமே எட்டிப் பார்ப்பதில்லையாம். அவரது கணவரோ கார்ப்பரேஷனில் தூய்மை பணியாளராக வேலை செய்வதால் அவ்வப்போது வந்து மனைவியின் வேலையையும் செய்து, அவரே போலியான கையெழுத்திட்டு செல்கிறாராம்..

இதனால் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதி தூய்மை பணியில்லாமல் கப்படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கூட்டணிக்காக இப்பவே தயாராகும் மலராத கட்சி பெண்மணி யாரு..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சிக்கும், பூ கட்சிக்கும் கூட்டணியும் இல்லை, ஒட்டு உறவு எதுவும் இல்லை என்றான பின்னரும் மான்செஸ்டர் நகரில் உள்ள பூ கட்சியின் தேசிய பதவியில் உள்ள பெண் நிர்வாகி, இலை கட்சியின் முக்கிய தலைவரை எவ்வகையிலும் விமர்சனம் செய்வதில்லையாம்.

பூ கட்சியின் தலைமையில் உள்ள தம்பி உள்ளிட்டோர் அவ்வப்போது இலை கட்சி தலைவரை கடுமையாக விமர்சித்து பேசினாலும், இவர் விமர்சித்து பேசாமல் இருப்பதற்கு பின்னால் தேர்தல் லாப கணக்குகளே காரணமாக இருக்கிறாதாம். தம்பியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வரும் அவர், இலை கட்சி தலைவரின் அண்ணன் நடத்திய ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு, அந்த நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளாராம்.

இது இருவருக்கும் இடையேயான மறைமுக கூட்டணியை வெளிப்படுத்துவதாக இருப்பதாக இரு கட்சி நிர்வாகிகளும் பேசிக்கொள்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஒரு மாவட்டத்தில் இலை கட்சியினர் திடீர் சுறுசுறுப்பு காட்டுகிறார்களாமே.. என்ன விஷயமாம்..’’ என் ஆர்வத்தோடு கேட்டார் பீட்டர் மாமா. ‘‘டெக்ஸ்டைல் மாவட்டத்தில் இலை கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் உள்பட சிலர் திடீரென சுறுசுறுப்பாகி உள்ளார்களாம்.

இது இலை கட்சியினர் இடையே இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். இந்த திடீர் சுறுசுறுப்புக்கு என்ன காரணம் என்று தெரியாமல், இலை கட்சியினர் திணறி வருகிறார்களாம். அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இப்பவே, ரெடியானால் தான், தலைமையிடம் தாங்கள் வைக்கும் கோரிக்கை எடுபடும் என அவர்கள் நினைக்கிறார்களாம். இதனாலேயே ஆக்டிவாக இருப்பதை காட்டிக் கொள்ள இந்த பில்டப் செய்து வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘போலீசையே தாக்கிய கும்பலின் பின்னணி என்ன?’’ என்று கேட்டார் பீட்டர் மாா. ‘‘சேலம் மாநகரில் பணம் இரட்டிப்பு தருவதாக கூறி ஏழை மக்களிடம் வேலூரைச்சேர்ந்த ஒரு கும்பல் பெரும் மோசடியில் ஈடுபட்டதாம். இதற்காக தனியாக ஒரு மண்டபத்தையே வாடகைக்கு எடுத்து நடத்தி வந்திருக்காங்க.. குறிப்பாக ஒரு லட்சம் கட்டினால், விலைஉயர்ந்த அரிசி ஒரு மூட்டை, வேட்டி சேலை என கொடுத்து மகிழ்வித்திருக்காங்க. அந்த கும்பலின் மாயவலைக்கு மயங்கிப்போன ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் நிலத்தை விற்று, பல லகரங்களை கொட்டியிருக்காங்க..

பணம் செலுத்தியவர்களுக்கு இரட்டிப்பாக பணத்தை எப்படி கொடுக்க முடியும் என்பதை பணம் செலுத்தியவர்கள் சிந்திக்க முடியாத வகையில் அவர்களை கச்சிதமாக பார்த்துக்கிட்டாங்களாம். இது தொடர்பாக உளவு பிரிவுக்கு தகவல் போயிருக்கு.. அவர்களும் களம் இறங்கி விசாரிச்சதுல பெரும் மோசடி நடக்குது.. பெரும் தொகையை லபக்கிக்கிட்டு அந்த கும்பல் தப்பிச்சிடுவாங்கன்னு தெரிஞ்சிருக்கு.. ஆந்திரா, வேலூரில் இதுபோன்ற மோசடி நடத்தி அப்பகுதி மக்களுக்கு அல்வா கொடுத்த வழக்கும் இன்னும் நடத்துக்கிட்டிருக்குன்னு கடந்த ஏழு மாதமா ரிப்போர்ட் போட்டிருக்காங்க..

ஆனால் அப்பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் யாருமே கண்டுகிடலையாம்.. எந்த புகாரும் எங்களுக்கு வரலன்னு சொல்லிக்கிட்டிருந்திருக்காங்க.. அதே நேர்த்துல தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் பெரும் பணவீச்சு நடந்ததும் தற்போது தெரியவந்திருக்காம்.. அவ்வப்போது இவ்வாறு பல ‘எல்’ பசை பாய்ந்த காரணத்தினால்தான் காக்கிச்சட்டை ஆபீசர்ஸ் அந்த பக்கமே திரும்பி பார்க்கலைன்னு விவரமறிந்த காக்கிச்சட்டைகள் சொல்றாங்க..

இந்த தைரியத்தில்தான், மண்டபத்துக்குள்ள புகுந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரை, அந்த கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தி கும்மிட்டாங்களாம்.. போலீஸ் என சொல்லியும் நடந்த தாக்குதலுக்கு பசை வீச்சே காரணமுன்னும் சொல்றாங்க.. இந்த விவகாரம் மாநகர உயரதிகாரியின் காதுக்கு சென்றிருக்காம். அந்த அதிகாரி எந்த விவகாரமாக இருந்தாலும் வெளியே தெரியக்கூடாது என்பதில் உறுதியான ஆபீசராம்.. எதையும் அமுக்கமாகவே விசாரிப்பாராம். அந்த விசாரணைதான் தற்போதும் நடந்துக்கிட்டிருக்காம். அந்த விசாரணையின் முடிவில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நேர்மையான காக்கிகளுக்கு எழுந்திருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாக்கப்பட்டதன் பின்னணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article