
தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்களுக்கு துணை வேந்தர்களை அரசே நியமிக்க வழிவகை செய்யும் 10 மசோதாக்கள் உள்ளிட்ட சில மசோதாக்களை சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய நிலையில் அவற்றுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி அதே சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி மீண்டும் கவர்னரின் ஒப்புதலுக்காக அவற்றை அரசு அனுப்பி வைத்தது.
மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு சட்டப்படி கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் அவர் ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சட்டசபையில் 2-வது முறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பியது சட்டவிரோதம் என்றும், அந்த 10 பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாக்களுக்கும், சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு 8-ந் தேதி பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், அதை முழுமையாக வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (11-ந் தேதி) நள்ளிரவில் சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
இணைதளத்தில் தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் தமிழ்நாடு அரசிதழில் தமிழக அரசின் அனைத்து திருத்த சட்ட மசோதாக்களும் வெளியிடப்பட்டன. அவை 2 அரசிதழ்களாக 11-ந் தேதியிட்டு வெளியிடப்பட்டு இருந்தன. பொதுவாக அரசாணை என்றாலும், அரசிதழ் என்றாலும் அவை கவர்னர் அல்லது ஜனாதிபதியின் ஒப்புதலுடன்தான் வெளியாகும். அதற்கான வாசகங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.
ஆனால், சட்ட மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டின் ஒப்புதல் ஏற்கனவே கிடைத்துவிட்டதால் நேற்று வெளியான அதற்கான அரசிதழ்களை, ஜனாதிபதி அல்லது கவர்னரின் ஒப்புதல் இல்லாமல், சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. இனி அந்த பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் அரசு கூறிய திருத்தங்கள் ஏற்றப்பட்டுவிடுகிறது. அதன்படி, வேந்தர் என்ற இடத்தில் தமிழக அரசு என்ற வாசகம் இடம் பெற்றுவிடுகிறது. எனவே வேந்தராக இருந்த கவர்னரின் அனைத்து அதிகாரங்களும் தமிழக அரசு வசம் சென்றுவிட்டன.
இதனால் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அரசின் அதிகார வரம்புக்குள் வந்துவிடுவதோடு, துணை வேந்தர் நியமனத்தில் கவர்னரின் தலையீடு இல்லாமல் போய்விட்டது. இந்த நியமனம் தொடர்பான வரம்புகளை இனி அரசே வகுத்துக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 16-ந்தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.