முட்டைகோஸ், காலிஃபிளவர், கேரட்… கந்தக பூமியில் கலக்கல் விவசாயம்!

3 weeks ago 5

விருதுநகர் மாவட்டத்தைப் பொதுவாக வறட்சி மாவட்டம் என்பார்கள். கந்தக பூமி, கரிசல்காடு என அழைக்கப்படும் இந்த மாவட்டத்தின் பெரும்பான்மையான நிலங்கள் வானம் பார்த்த பூமியாக திகழ்பவை. இத்தகைய அம்சத்தை அப்படியே அச்சரம் பிச காமல் பெற்றிருக்கும் ஒரு கிராமம்தான் காரியாப்பட்டி. வானம் பார்த்த கரிசக்காடு என்ற பாடல் இந்த ஊரின் வயல்வெளிகளைப் பார்த்தால் நமது உதடுகள் தாமாக முணுமுணுக்கும். இந்த ஊரின் ஒரு பகுதியாக விளங்கும் மாந்தோப்பைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற விவசாயி மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையும் கேரட், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளைப் பயிரிட்டு, விளைச்சல் எடுத்து அசத்தி வருகிறார். இதைக் கேள்விப்பட்டு மாந்தோப்பு ராமச்சந்திரனைச் சந்தித்தோம்.

“எனது தந்தையார் இதே மாந்தோப்பு கிராமத்துல ஊராட்சி மன்ற தலைவரா இருந்தாரு. என்னோட 12வது வயசுல எனக்கு இவர்தான் விவசாயத் தொழிலைக் கத்துக் கொடுத்தாரு. அவர் மானாவாரி விவசாயம் செஞ்சதோட, எங்க வீட்டுக்குப் பின்னால இருக்குற கிணத்துத் தண்ணிய வெச்சு வீட்டுக்குத் தேவையான கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், புடலை, பீர்க்கை, பாகல்னு காய்கறிகளையும் பயிரிடுவாரு. அந்தக் காய்கறிகளை அப்படியே வீட்டுச் சமையலுக்காக எடுத்துக்குவோம். நானும் அந்தக் காய்கறிகளோட விதைகளை எடுத்துட்டுப் போயி பள்ளிக் கூடத்துக்குள்ள இருக்கிற காலி இடத்துல விதைப்பேன். பள்ளிக்கூடத்துக்கு பக்கத்துல இருக்குற கிணத்துலதான் ஊருல உள்ளவங்க குளிப்பாங்க. அவங்க குளிக்கிற தண்ணிய பள்ளிக்கூடத்துப் பக்கம் திருப்பி விட்டு காய்கறிச் செடிகளுக்குத் தண்ணி பாய்ச்சுவேன். நான் செய்றதைப் பார்த்துட்டு எங்கூடப் படிச்ச மூனு பசங்க தண்ணிப் பாய்ச்ச வந்தாங்க.
இத்தனை நாள்ல பூப்பூத்து, பிஞ்சிப் பிடிச்சு காய்காய்க்கும்னெல்லாம்எங்களுக்குத் தெரியாது.

ஆனா எப்படியாவது காய் காய்க்க வெச்சிடணும்னு நாங்க கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கிட்டோம். நினைச்ச மாதிரியே காய் காய்ச்சித் தொங்குச்சு. வாத்தியாரு, டீச்சர்கள்லாம் ஆச்சர்யப்பட்டுப் போனாங்க. அந்த சமயத்துல மாந்தோப்பு ஊராட்சி மன்றத் தலைவரா இருந்த எங்க அப்பா, சுதந்திர தினத்துக்கு பள்ளிக்கூடத்துல கொடியேத்த வந்தாரு. பள்ளிக்கூடத்துல இருக்கிற செடிகள்ல காய் காய்ச்சுக் கிடக்குறதைப் பார்த்து வாத்தியார், டீச்சர்களைப் பாராட்டினாரு. அப்போது அவருகிட்ட ‘உங்க மகனும் மூணு பையன்மார்களும் சேர்ந்துதான் இந்தக் காய்கறிகளை விளைய வெச்சிருக்கானுக’னு வாத்தியாருங்க சொல்லிட்டாங்க. அந்தக் கொடியேத்த நாள்ல எங்க நாலு பேருக்கும் ஒரு குயர் கோடு போட்ட நோட்டு, பென்சில், ஸ்கேல், ரப்பர், கட்டர் எல்லாத்தையும் குச்சி டப்பாவுலப் போட்டுப் பரிசாக் கொடுத்தாங்க. அதுல நாங்க 4 பேரும் ரொம்ப உற்சாகமாகிட்டோம்.வாரத்துக்கு ரெண்டு தடவை நாங்களே அந்தக் காய்கறிகளைப் பறிச்சு அசெம்ப்ளியில மேஜை மேல வெச்சிருவோம். பீர்க்கங்காய் 10 பைசா, புடலங்காய் 15 பைசா, கீரைக்கட்டு 5 பைசா, மிளகாய்க்கூறு 10 பைசான்னு வித்து, அந்தக் காசை ஸ்கூலுக்கே கொடுத்திடுவோம்.

ஒருநாள் எங்க அப்பாவே நேர்ல வந்து எல்லாத்தையும் காசு கொடுத்து வீட்டுக்கு வாங்கிட்டு போயிட்டாரு. ஏர்மாடுல உழணும், தண்ணி பாய்ச்சணும்ங்கிற ஆசையில அஞ்சாம் கிளாசுக்கு மேல ஸ்கூலுக்குப் போகலை. எல்லாரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ‘விவசாயத்தைத்தான் செய்வேன்’னு சொல்லிச் சாதனையா இருந்துட்டேன். படிப்பை ஏறக்கட்டுன நான் முழுமூச்சா விவசாயத்துல இறங்குனேன். நம்ம ஊருல விளைகிற நெல், நிலக் கடலை, பருத்தி போன்ற பயிர்களை நானும் விளைவிக்கிறேன். இது மட்டுமல்லாம எங்க அப்பா போலவே வீட்டுக்குத் தேவையான கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய்னு விளைவிக்கிறேன். போன வருசம் ஒரு சோதனை முயற்சியா மலை சார்ந்த பகுதிகள்ல விளைகிற பீட்ரூட்டைப் பயிர் செஞ்சி பார்த்தேன். அது நல்லா வந்துச்சி. அதனால இந்த வருசம் கேரட், முட்டைக்கோஸ், சோயா பீன்ஸ், பட்டர் பீன்ஸ் காய் கறிகளையும் விதைச்சேன். இதுங்களும் நல்லா வளர்ந்து பலன் கொடுக்க ஆரம்பிச்சிருக்கு’’ என மகிழ்ச்சியோடுபகிர்ந்துகொண்டார்.
தொடர்புக்கு:
ராமச்சந்திரன்:
99446 76015.

பக்கத்தில் இருந்துகொண்டு பயிர்களைக் கவனித்து வந்தால்தான் விவசாயத்தில் நல்ல விளைச்சல் பார்க்க முடியும் என உணர்ந்த ராமச்சந்திரன், தனது ஊரில் இருந்து சற்று தூரத்தில் உள்ள தனது வயலில் வீடு கட்டிக்கொண்டு அங்கேயே வசித்து வருகிறார்.

தண்ணீர் வசதி குறைவு என்ற நிலையில் மண் வளத்தை மேம்படுத்தினால்தான் மகசூல் எடுக்க முடியும். இதற்காக நாட்டு மாடு வளர்த்து அதில் இருந்து கிடைக்கும் கழிவுகளைக் கொண்டு இயற்கை இடுபொருட்கள் தயாரித்து, அவற்றை நிலத்திற்கு அளித்து மண்வளத்தை மேம்படுத்தி வருகிறார்.

 

The post முட்டைகோஸ், காலிஃபிளவர், கேரட்… கந்தக பூமியில் கலக்கல் விவசாயம்! appeared first on Dinakaran.

Read Entire Article