பொள்ளாச்சி சம்பவத்துக்கு கிடைத்த நீதி

4 hours ago 3


தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த தமிழ்நாடே இந்த தீர்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலானது. 'அண்ணா அடிக்காதீங்க...அண்ணா அடிக்காதீங்க...கழட்டிடுறேன்...அண்ணா பெல்ட்டாலே அடிக்காதீங்க' என்ற ஒரு இளம் பெண்ணின் கதறல் எல்லோரையும் பதற வைத்தது.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஒரு பெண் மிகவும் துணிச்சலாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காமக்கொடூரர்களிடம் சிக்கிய அந்த பெண்ணின் அலறல், கதறல், துடிதுடிப்பு அரசியல் கட்சிகளையும், மாதர் சங்க அமைப்புகளையும் வீறுகொண்டு எழுந்து நீதிவேண்டும் என்று போராட வைத்தது.

இதைத்தொடர்ந்து முதலில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கும், தொடர்ந்து சி.பி.ஐ.க்கும் மாற்றப்பட்டது. விசாரணையில் இதுபோன்ற கொடூர செயல் அந்த ஒரு பெண்ணுக்கு மட்டுமல்ல, மேலும் பல பெண்களுக்கு இழைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

காதலிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி பெண்களை ஏமாற்றி, வரவழைத்து அவர்களை கூட்டு பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து மீண்டும் மீண்டும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்வதை வழக்கமாக ஒரு கும்பல் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பைக் பாபு, ஹெரோன்பால், அருளானந்தம், அருண்குமார் என 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த பாலியல் பலாத்காரம் எல்லாம் ஒரு பண்ணை வீட்டில் நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்தம் 8 பெண்கள் ஏமாற்றப்பட்டோம் என்று துணிச்சலாக புகார் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றத்திலும் சாட்சியம் அளித்தனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவில் நீதி வழங்கக்கோரி தி.மு.க. மகளிரணி சார்பில் கனிமொழி எம்.பி. தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சியில் நடந்தது.

இதுபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாதர் சங்கம், நக்கீரன் கோபால் மற்றும் பலர் இந்த பிரச்சினையை கையில் எடுத்து தீவிரமாக போராடினர். சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், 'பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் நீதி பெற்றுத்தரப்படும்' என்று வாக்குறுதி அளித்ததோடு, ஆட்சிக்கு வந்தவுடன் கோவையில் மகளிர் சிறப்பு நீதிமன்றம் அமைக்கவும் நடவடிக்கை எடுத்தார்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரம் எந்த காரணத்தைக்கொண்டும் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்ற வகையில் மிக ரகசியமாக அவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டார். அனைத்து விசாரணைகளையும் மிக துல்லியமாக மேற்கொண்டப்பிறகு நேற்று குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று முதலில் தீர்ப்பு கூறிவிட்டு, 2 மணி நேரத்துக்கு பிறகு அவர்கள் அனைவருக்கும் சாகும்வரை ஆயுள்தண்டனை என்று உச்சபட்ச தண்டனையை அறிவித்தார்.

இதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார். இதன்மூலம் அந்த பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். ஆனால் இந்த வழக்கில் 6 ஆண்டுகளானாலும் நீதி மறுக்கப்படவில்லை. இந்த வழக்கை விசாரணை செய்த சி.பி.ஐ. பங்கு சிறப்பானது. அதுபோல தொய்வில்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியே தெரியாமல் விசாரணை நடத்திய நீதிமன்றமும் பாராட்டுக்குரியது.

Read Entire Article