
நியூயார்க்,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சவுதி அரேபியா சென்றுள்ளார். அங்கு அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, நான் பதவி ஏற்ற நாளிலேயே போரை நான் விரும்ப மாட்டேன் என்று கூறினேன். அதனால்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த சண்டையை நான் பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தினேன்.
வர்த்தகத்தை முன்னிருத்தி இந்த உடன்பாட்டை எட்டவைத்தேன். 'நண்பர்களே, வாருங்கள். ஒரு ஒப்பந்தம் செய்வோம். கொஞ்சம் வர்த்தகம் செய்வோம்" என்று அவர்களிடம் நான் கூறினேன்.
அணு ஏவுகணைகளை வர்த்தகம் செய்ய வேண்டாம். நீங்கள் உருவாக்கும் அழகான பொருட்களை வர்த்தகம் செய்வோம் என்றேன். அவர்கள் இருவரும் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்கள், மிகவும் வலுவான தலைவர்கள், நல்ல தலைவர்கள், புத்திசாலித் தலைவர்கள். எனவே சண்டையை நிறுத்திவிட்டார்கள். சிறியதாகத் தொடங்கிய போர் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருந்த நேரத்தில், அதில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் நிலை உருவாகி இருந்தது" என்றார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த சண்டையை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் அதே கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.