முடக்கு வாதம் பற்றி முழுமையாக புரிந்து கொள்வோம்!!

2 weeks ago 5

நாம் நம் அன்றாட வேலைகளை செய்வதற்கு உடல் அசைவுகள் அவசியம். உடல் அசைவுகளுக்கு உடலின் மூட்டுகளே காரணம். நம் உடலில் சிறிய மற்றும் பெரிய மூட்டுகளின் இசைவான அசைவுகளுக்கு ஏற்பவே நம்முடைய அன்றாட நடைமுறை அமைகிறது. அந்த வகையில் மூட்டுகளில் ஏற்படும் வலி வீக்கம் போன்றவை நம் உடலின் செயல்பாட்டை குறைப்பதுடன், நீடித்து இருக்கும் பொழுது முடக்கியும் விடுகிறது. இந்த வகையான முடக்கத்திற்கு காரணமான ஒரு நோய் முடக்கு வாதம் அதாவது ரூமட்டாய்ட் ஆர்த்ரைடீஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயை பற்றி முழுமையாக நாம் புரிந்து கொள்ள மிக எளிமையாக விளக்குகிறார் காவேரி மருத்துவமனை ருமடாலஜிஸ்ட் டாக்டர். நிகிலா.

முடக்கு வாதம் என்று அழைக்கப்படும் இந்த நோய் நம் உடலில் பெரிய மற்றும் சிறிய மூட்டுகளை எந்த பாகுபாடும் இன்றி தாக்குகிறது. மூட்டுகளில் அழற்சியை ஏற்படுத்தி அதன் விளைவாக வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

இதற்கு காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்தி அவசியமற்று அதிகப்படியாக வேலை செய்வதுதான். நம் உடலின் எதிர்ப்பு சக்தி நம் உடலையே தாக்கும் ஒரு குறைபாடே இதற்கு காரணம். இது மரபியல் ரீதியானது. நம் உடலில் உள்ள ஒரு மரபணு தவறாக இயங்குவதால் ஏற்படுகிறது. புறசூழல்களும் இதற்கு துணை புரியும் பொழுது இந்த மரபணு முரண்பாடாக செயல்பட்டு, நம் உடலின் எதிர்ப்பு சக்தியை கொண்டு, நம் உடல் மூட்டுகளையே அது எதிர்க்கிறது.

அழற்சி என்பது பொதுவாக ஒரு பிரச்சனையை சமாளிக்க நம் உடலின் எதிர்ப்பு சக்தி அந்த இடத்தில் நீர் கோர்வையை ஏற்படுத்தி மூளைக்கு வலியை உணர்த்தி அந்த இடத்திற்கு தேவையான அதிகப்படியான ரத்த ஓட்டத்தையும் எதிர்ப்பு சக்தி செல்களையும் அனுப்பி அதை பழுது செய்யும் ஓர் வேலையாகும். அந்த வேலையை பிரச்சனை இல்லாத இடத்தில் செய்யும் பொழுது அங்கு வீக்கமும் வலியும் ஏற்படுகிறது. வலியும் வீக்கமும் சரியாகும் பொழுது அந்த மூட்டில் உள்ள செல்கள் தழும்பு செல்களாக (ஸ்கார் டிஷ்யூஸ்) மாறி விடுகிறது. அடிக்கடி இப்படி அழற்சி நடக்கும் பொழுது அந்த மூட்டு தன்னுடைய இயல்பான வடிவத்தை இழந்து விடுகிறது. இதனால் கால், கை, எலும்பு மூட்டுகள் வடிவத்தை இழந்து கோனல் மானலாக மாறுவதும் உண்டு. இதனால் நம் உடல் அசைவுகள் மாறிவிடுவதும் நடக்க முடியாமல் போவதும் இறுதியில் அசைவற்று முடங்குவதும் ஏற்படுகிறது. இதுவே முடக்கு வாதம்.

இந்த பிரச்சனையை எப்படி கண்டறிவது?

இந்த நோயை வெறும் பரிசோதனைகள் மூலம் மட்டும் கண்டுபிடிக்க முடியாது. இதை இதற்கான சிறப்பு மருத்துவர் நேரடியாக நோயாளியின் மூட்டுகளை பார்வையிடுவதன் மூலமும், அவருடைய அறிகுறிகளை நன்கு கேட்டறிவதின் மூலமும் மட்டுமே முழுமையாக இந்த நோயை கண்டுபிடிக்க முடியும். நோய் இருக்கிறது என்பது தெரிந்த நிலையில் மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள சில ரத்த பரிசோதனைகள் (RA factor, ESR, CRP) மற்றும் இது மற்ற உள் உறுப்புகளான நுரையீரல் இருதயம் போன்றவற்றையும் பாதித்திருக்கின்றதா என்பதை கண்டறிய நுரையீரல் இருதய நோய்களுக்கான பரிசோதனைகளையும் செய்ய வேண்டி இருக்கும்.

 

முடக்கு வாதத்திற்கான சிகிச்சைகள் என்ன?

முடக்கு வாத நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் பொழுது அதற்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இன்றி இயல்பாக வாழ முடியும். அதுவே நாள் கடந்து வரும் பொழுது சிகிச்சை நீண்ட நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். மேலும் இந்த நோய் முழுவதுமாக குணப்படுத்த முடியும் என்பது இல்லை. இதை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதினால் மட்டுமே நாம் நம் அன்றாட வேலைகளை சிரமமின்றி செய்து கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்.

இந்த நோய்க்கு முன்பெல்லாம் வலி நிவாரணிகளையும், ஸ்டிராய்டு மருந்துகளையும் பெரும் அளவில் கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் வலி அதிகமாக இருக்கும் நேரத்தில் மட்டும் குறைவான அளவில் ஸ்டீராய்டு மற்றும் வலி நிவாரணிகளை கொடுத்து அவற்றை படிப்படியாக குறைத்து விடுகிறோம். இந்த நோய்க்கான குறிப்பான மருந்துகளை மட்டும் எந்தப் பக்க விளைவுகளும் இல்லாமல் தேவையான காலத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். அந்த மருந்துகளை அவ்வப்பொழுது ரத்த பரிசோதனைகள் மற்றும் பிற உடல் உறுப்புகளின் செயல்பாடுகளையும் கண்காணித்து தேவைக்கேற்ப அளிக்கிறோம். இதனால் பெரும் அளவில் பக்க விளைவுகள் தவிர்க்கப்படுவதுடன் நோயாளியின் வாழ்க்கை தரமும் குறைவதில்லை.

இந்த நோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பொழுது ரெமிஷன் என்று நாங்கள் குறிப்பிடும் ஒரு காலம் உண்டு. இந்த நேரங்களில் எந்த வலியோ வீக்கமோ இல்லாமல் நோயாளிகள் இருப்பார்கள். அந்த நேரத்தில் மருந்துகளை முழுமையாக நிறுத்தி விடுவார்கள். அப்படி நிறுத்தி மீண்டும் வலி ஆரம்பிக்கும் பொழுது மறுபடியும் ஸ்டீராய்டு வலி நிவாரணிகளில் இருந்து சிகிச்சையை தொடங்க வேண்டி இருக்கும். எனவே நோயாளிகள் இந்த ரெமிஷன் நேரத்திலும், குறைவான அளவு, நோய்க்கான மருந்தை மட்டும் எடுத்து வரும் பொழுது இந்த அதிகப்படியான மருந்துகளை எடுப்பதை தவிர்க்க முடியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

முடக்கு வாதம் வந்தவர்கள் மருத்துவர் பரிந்துரையின்படி முறையான மருந்தளிப்பு சிகிச்சைகளையும், ஆரோக்கியமான மன உளைச்சல் இல்லாத வாழ்க்கை முறை, சத்துள்ள உணவு, உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது, புகை பிடிக்கும் பழக்கம் மற்றும் மது அருந்தும் பழக்கம் ஆகியவற்றை நிறுத்துவது, தேவையான உடற்பயிற்சி, வலி அதிகம் இருக்கும் பொழுது பிசியோதெரபி போன்றவற்றை கடைப்பிடித்து வந்தால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம்.

Doctor Profile

Dr. Nikhila G S

Rheumatology and Clinical Immunology

MBBS, MD, DM

Kauvery Hospital Alwarpet Chennai

For Appointments Call : 044 4000 6000

Read Entire Article