அமராவதி,
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ண்ப்பட்டன. இதில், 48 தொகுதிகளில் வெற்றிபெற்று டெல்லியில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப்பின் டெல்லியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது. 22 தொகுதிகளை மட்டும் கைப்பற்றிய ஆம் ஆத்மி தோல்வியடைந்தது. காங்கிரஸ் எந்த தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.
இந்நிலையில், டெல்லியில் பாஜக பெற்றுள்ள வெற்றி பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
27 ஆண்டுகளுக்குப்பின் டெல்லியில் பாஜக அரசை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. ஏனென்றால், இன்றைய வெற்றி பாஜக அல்லது டெல்லி மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டின் சுய மரியாதைக்கானது. டெல்லியில் பாஜக பெற்றுள்ள வெற்றி பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. நாட்டிற்காக நிலையான மாடலை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார்' என்றார்.