![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38334734-usadt.webp)
வாஷிங்டன்,
அமெரிக்காவின் எல்லை வழியே, அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் புலம்பெயர்ந்து அந்நாட்டுக்குள் செல்கின்றனர். இந்நிலையில், இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக, டிரம்ப் தலைமையிலான புதிய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், இந்தியாவை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் 104 பேர், அமெரிக்க ராணுவ விமானத்தின் உதவியுடன் சமீபத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, இதுவரை 8 ஆயிரம் சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. இந்த நடவடிக்கை தொடரும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டில், ஆவணங்களில்லா குடியேறிகள் எத்தனை பேரை கைது செய்ய போகிறோம் என்பதற்கான சரியான தகவலை அதிகாரிகள் பகிரவில்லை.
ஆனாலும், தினந்தோறும் கைது நடவடிக்கை தொடர்கிறது. இது, ஜோ பைடன் ஆட்சியில், மேற்கொள்ளப்பட்ட தினசரி சராசரி கைது எண்ணிக்கையை விட அதிகரித்து விட்டது.
இந்த சூழலில், ஜஸ்பல் சிங் (வயது 29) என்ற இந்தியர் வாஷிங்டன் நகரின் துக்விலா பகுதியில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் நடத்தும் நோக்குடன் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, மெக்சிகோ, கவுதமாலா மற்றும் எல் சால்வடார் நாடுகளை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 4 பேரும் அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்க துறை அதிகாரிகளின் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். சமூகத்தினரை பாதுகாப்பது மற்றும் இதுபோன்ற தாக்குதல்கள் மேற்கொண்டு நேரிடாமல் தடுப்பது ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.