லக்னோ: உபி முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, தனது தம்பி ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்திருந்தார். ஆனால், மாமனாரின் சொல் பேச்சை கேட்டு ஆகாஷ் ஆனந்த் செயல்படுவதாக அவர் மீது மாயாவதி அதிருப்தி அடைந்தார். இதற்கிடையே, நேற்று முன்தினம் நடந்த கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் ஆகாஷ் ஆனந்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட கட்சி பதவிகள் அனைத்தையும் மாயாவதி பறித்தார். சாகும் வரை தனக்கு யாரும் அரசியல் வாரிசு இல்லை என்றும் அறிவித்தார்.
இது குறித்து ஆகாஷ் ஆனந்த் நேற்று சமூக ஊடகத்தில் நீண்ட அறிக்கை வெளியிட்டார். அதில் மாயாவதியின் வார்த்தைகள் தனக்கு கல்வெட்டு போன்றது என்றும் மாயாவதி முடிவை மதிப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் இதில் கோபமடைந்த மாயாவதி, ஆகாஷை கட்சியிலிருந்து ஒரேடியாக நீக்க நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக மாயாவதி தனது எக்ஸ் பதிவில், ‘‘ஆகாஷின் நீண்ட பதில் வருத்தம் அளிக்கிறது. அவரது விளக்கம் அரசியல் முதிர்ச்சியை அடையாளப்படுத்துவதற்கு பதில் சுயநலத்தையும் ஆணவத்தையும் காட்டுகிறது. கட்சியின் நலனுக்காக அவர் நீக்கப்படுகிறார்’’ என கூறி உள்ளார்.
The post முக்கிய பொறுப்புகளை பறித்த நிலையில் சகோதரன் மகனை கட்சியில் இருந்து நீக்கினார் மாயாவதி appeared first on Dinakaran.