மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ராமேஸ்வரத்தில் பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி: அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அறிவிப்பு

1 day ago 3

ராமேஸ்வரம்: மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காவிடில், ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் எஸ்.ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ நேற்று வெயிட்டுள்ள அறிக்கையில், ‘‘2014ம் ஆண்டு பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை அதிகரித்துள்ளது.

பிரதமர் மோடியின் பலவீனமான பாஜ அரசினால் தான் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழக மீனவர்களுக்கு அபராதமும், படகுகளை நாட்டுடமையாக்கும் சட்டமும் கடந்த 2018ல் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 4 அன்று இலங்கை செல்லும் பிரதமர் மோடி, அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக, புதுச்சேரி மாநில மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதை நிறைவேற்றி தராதபட்சத்தில், புதிய பாம்பன் பாலத்தை திறப்பதற்காக ராமேஸ்வரத்திற்கு ஏப். 6ம் தேதி வரும், பிரதமர் மோடியை கண்டித்து மீனவர்களை திரட்டி கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளார்கள்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மீனவர்களுக்கு 3 நாள் தடை
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி வரும் 6ம் தேதி திறந்து வைக்கவுள்ளார். பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட தீவு முழுவதும் நாளை மறுநாள் (ஏப். 4) முதல் 6ம் தேதி வரை 3 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ராமேஸ்வரத்தில் பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி: அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article