குடியாத்தம், மே 12: குடியாத்தத்தில் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், கெங்கையம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1ம் தேதி சிரசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி வரும் 15ம் தேதி சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை, காவல்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலத்திலிருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று கெங்கையம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள பொதுமக்கள் சீர்வரிசை கொண்டு வந்தனர்.
பின்னர், அம்மன் உற்சவ மூர்த்திக்கு அலங்காரம் செய்யப்பட்டு அக்னி யாகங்கள் வளர்க்கப்பட்டு கெங்கையம்மனுக்கு மாங்கள்யம் கட்டி திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலையில் தொடங்கிய திருக்கல்யாண வைபவ விழா நள்ளிரவு வரை நடைபெற்றது. மேலும் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கும் அன்னதானமும், மாங்கள்யமும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து அம்மனை வழிபட்டனர். மேலும், 150 ஆண்டுகளுக்கு பிறகு புதிய கொடிமரம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
திருக்கல்யாணம் நிகழ்ச்சிக்கு முன்பாக குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. இவை 36 அடி உயர பிரம்மாண்ட கொடி மரத்தில் கொடி பறந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
The post கெங்கையம்மன் திருக்கல்யாண வைபவம் ஏராளமான பெண்கள் காத்திருந்து வழிபட்டனர் குடியாத்தத்தில் பிரசித்திபெற்ற appeared first on Dinakaran.