
சென்னை,
இந்தியில் ஆதிஷ், ஹம் ஹெயின் கல் ஆஜ் அவுர் கல் போன்ற டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஸ்மிருதி இரானி. ஏக்தா கபூர் இயக்கத்தில் உருவான 'கியூங்கி சாஸ் பி கபி பஹூ தி' தொடரில் இவரது துளசி கதாபாத்திரம், இல்லத்தரசிகளின் உள்ளங்களில் இவரை இடம்பெற செய்தது.
இதுதவிர நிதிஷ் பரத்வாஜ் இயக்கத்தில் உருவான ராமாயணம் தொடரில் சீதாவாக நடித்து பேசப்பட்டார். விருத் என்ற தொடரை தயாரிக்கவும் செய்தார். இப்படி சின்னத்திரையில் கலக்கிய ஸ்மிருதி இரானி, 2003-ம் ஆண்டில் பா.ஜனதாவில் இணைந்தார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2014 முதல் 2024-ம் ஆண்டு வரை மத்திய மந்திரியாக பதவி வகித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். மந்திரி பதவி போன பிறகு, ஸ்மிருதி இரானி மீண்டும் தாய்வீட்டுக்கே திரும்பியுள்ளார். அதாவது, முன்புபோலவே டி.வி. தொடரில் நடிக்க முடிவு செய்துள்ளார். ஏக்தா கபூரின் 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி' என்ற தொடரின் இரண்டாம் சீசனில் அவர் மீண்டும் துளசி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான புரமோஷன் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கும் ஸ்மிருதி இரானிக்கு வாழ்த்துகள் குவிகிறது.